பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

628

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ் ராஜேந்திரன், நாமக்கல் பழனிவேலன் எம்.எல்.ஏ., ஏ. பத்மநாதன் அய். ஏ.எஸ் ஆகியோரையும் கண்டு , நலம் விசாரித்துச் சென்றார். மறுநாள் முதல்வர் கலைஞர் மருத்துவமனை சென்று, மணியம்மையாரின் நலம் எவ்வாறுள்ளதெனக் கண்டுவந்தார். அடுத்த 15.3.73 அன்றுதான் அம்மையார் இல்லந்திரும்பி, மறுநாள் திருச்சி செல்ல முடிந்தது. 18.2.73 அன்று சேலத்திலிருந்த பெரியாருக்கு அதிகவலி ஏற்பட்டு, அங்கேயே சுந்தரம் நர்சிங்ஹோமில் சேர்க்கப்பட்டார். வேலூரிலிருந்து டாக்டர் பட், சேலம் சென்று, புதிய டியூப் மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்தவாறே 20 ந் தேதி திருச்சி சென்றார் பெரியார்.

சென்னை உயர்நீதி மன்றம் துவங்கிய 112 ஆண்டுகளில் நடைபெறாத ஓர் அதிசயம் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. 14.2.1973 அன்று அய்க்கோர்ட் கூடுதல் நீதிபதியாகத், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ. வரதராஜன் நியமிக்கப்பட்டார். நீதிபதி எஸ். நடராஜனும் இன்னொரு ஜட்ஜாக நியமனம் பெற்றார். முத்தமிழ்க் கலாவித்துவரத்தின அவ்வை டி.கே சண்முகம் 15.2.73 அன்று சென்னையில் காலமானார். திருச்சியில் 4ந் தேதி “தமிழ்த்தாய் வாழ்த்து யாருக்காக, எதற்காகப் பாடுகிறீர்கள்? இப்போது ஆட்சியில் இருந்து கொண்டு, மக்களுக்கான நன்மைகளைச் செய்து வருகின்றவர்களை வாழ்த்துங்கள் அது போதும்! இன்றைய தினம் கலைஞரை எதிர்ப்பவர்கள் கூட, அவர் இன்னின்ன தவறுகள் செய்தார்; நாங்கள் வந்தால் அப்படித் தவறு செய்யாமல், இன்னின்ன நன்மை செய்வோம். என்று ஏதாவது சொல்ல இடமே இல்லையே இன்றைக்கு நிலவுகின்ற ஜாதி இழிவை ஒழிப்பதற்கான திட்டம் அவரிடம் தானே உள்ளது.!” என்று பேசினார் பெரியார்.

திருநெல்வேலியிலுள்ள ஶ்ரீ வைகுண்டம் நகரில் நான்கு புறமும் மதிற்சுவரால் சூழப்பட்ட பகுதி ஒன்றுள்ளது. அதற்குள், கோட்டைப் பிள்ளைமார் என்றோர் வகுப்பார், பல தலைமுறைகளாக வெளியுலகைப் பாராமலே வாழ்ந்து வருகிறார்கள். மூடநம்பிக்கையின் பாற்பட்ட அந்தப் பழைமையான சம்பிரதாயத்தை 8.2.73 அன்று உடைத்து நொறுக்கினர். அதனால் மகிழ்ச்சி கொண்டு, பகுத்தறிவுப் பகலவளாம் தந்தை பெரியாருக்கு, அந்தச் சமுகத்தினர் பாளையங்கோட்டை நகரில் 1.3.73 அன்று விமரிசையான விருந்தொன்று நடத்தினர். அங்கேயே சரஸ்வதி அம்மாள் என்பவர் பெருமனத்துடன் 1,001 ரூபாய் அன்பளிப்பு பெரியாருக்கு வழங்கினார்.

திருச்சியிலுள்ள கனரக பாய்லர் தொழிற்சாலைக்குப் பெரியார் 6.3.73 அன்று வருகை தந்து, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும் பின்வருமாறு கருத்துப் பதிவு செய்தார்:- பாய்லர் தொழிற்சாலை இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்பதையும்,