பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

629


அதன் நிர்வாகமும் திறமையும் மேல் நாட்டு வாய்ப்புகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்லாத அதிசயப்படும் தன்மையில் நடந்து வருவதும் கண்டு, மிக மிக மகிழ்ச்சியும், அந்த வாய்ப்புக் கிடைத்தற்குப் பெருமையும் அடைந்தேன்.

-ஈ.வெ. ராமசாமி.

சிவகங்கையிலுள்ள மன்னர் ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் பெரியார் 8.3.73ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிச் சொற்பெருக்காற்றினர்:- “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றித் தெளிவாகப் பேச வேண்டுமானால், பகுத்தறிவுக் கூட்டத்தில் தான் பேச முடியும். அப்படிக்கில்லாது, கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு ஆட்பட்ட இடங்களில் பேசுவதென்றால், வழ வழா கொழ கொழா என்றுதான் பேச வேண்டி வரும்!

பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவியும், கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு அடுத்து, அவருக்கு ஈடாக, வேறு எந்தக் கவிஞரும் தோன்றவேயில்லை! பாரதிதாசன் புதுமைக் கருத்துக்களையும் புரட்சிக் கருத்துக்களையும், மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக் கருத்துகளையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு அனு சரணையாகச் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் இருந்தன. அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை இவற்றைக் கண்டித்து நன்றாகப் பாடியுள்ளார்.

பாரதியாருக்கோ வள்ளுவருக்கோ கொடுக்கின்ற மரியாதை, நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள். காரணம், பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர் என்பதால்தான் மற்ற கவிஞர்கள் பழைமை விரும்பிகள் ஆனதனால், பழைமையில் பற்றுக் கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள்; போற்றுகின்றார்கள் பாரதியாரை எடுத்துக் கொண்டால், அவர் தாவாத கொள்கை இல்லை. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு எல்லாம் கூறியுள்ளார்.

பாரதிதாசன் எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், பகுத்தறிவுப் புறம்பான கருத்துக்களை எடுத்துப்பாட முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்துக்கான கருத்துக்களைத் துணித்து கூறிய பெரும்புலவர் ஆவார் அவர். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத்தக்க சமாதானமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன.

நமது மக்கள், இப்படிப்பட்டவருக்குப் பாராட்டும் பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது, வருந்தத் தக்கதாகும். காரணம், அவர் பகுத்தறிவு வாதியானபடியால், அவரது பணிக்குக்