பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

630

பகுத்தறிவு பகலவன் தந்தை


கிடைக்க வேண்டிய மதிப்புக் கிடைக்கவில்லை. பாரதிதாசனைப் போன்று புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்லிப் பரப்ப ஆளே இல்லையோ! பாரதிதாசன்போல நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்களேயானால், நமக்கு 2,000 3,000 ஆண்டுகளாக இருந்து வரும் இழிதன்மை இருந்திருக்குமா?"

வட ஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு நகரில் இருபெரும் மாநாடுகள் மிகச் சீரோடும் சிறப்போடும் ஏற்பாடாகி இருந்தன. 7.4.73 அன்று திராவிடர் கழக மாநாடு, வரவேற்புக் கழகத்தலைவர் ஆம்பூர் பெருமாள், மாநாட்டுத் தலைவர் பெரியார், திறப்பாளர் வீரமணி, கொடி உயர்த்தல் பிரபாவதி பி.ஏ., பி.எல்., - 8ந் தேதி பகுத்தறிவாளர் மாநாடு. வரவேற்புக் குழுத் தலைவர் வீராசாமி எம்.எல்.ஏ., தலைவர் அன்பில் தர்மலிங்கம், திறப்பாளர் பேராசிரியர் அன்பழகன், பெரியார் படத்திறப்பு எஸ்.ராமசந்திரன், கண்காட்சித் திறப்பு ப.உ. சண்முகம். ஆனால் வயிற்றெரிச்சல் கொண்ட வன்பகையாளர் சிலர், 6ந் தேதி நள்ளிரவில் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்து, ஓடினர் பெருமளவு தீக்கரையாயிற்று எனினும், வரவேற்புக் குழுவினரின் அரிய முயற்சியால் காலையில் பந்தல் சரி செய்யப்பட்டது. ஊர்வலம் தொடங்குவதில் மாத்திரம் சிறிது தாமதம் நேர்ந்தது. பெரியார், வீரமணி, வீராசாமி ஆகியோர் அமர்ந்து ஊர்வலமாக வந்தனர். தி.மு.க ஆட்சியைப் பாதுகாப்போம்; திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்றே கூற வேண்டும்; சுதந்திரத் தமிழ்நாடு அடைந்தே தீருவோம்; கோயில்களைப் புறக்கணிப்போம் என்பன போன்றவை முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 8 - ந் தேதி இரவு சென்னை திரும்புங்கால், தனது கார் மரத்தில் மோதியதால், காயமுற்று, ஓய்வில் இருந்த ஆர்க்காடு வீராசாமியைப் பெரியார் 17.4.73 காலையில் சென்று பார்த்து, நலம் விசாரித்தார்.

12.4.73 அன்று பெரியார் நெய்வேலியில் நடைபெற்ற இராவணன் விழாவிலும், சிதம்பரம் வட்டத்தில் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். “கிராமத்தான் உழைக்க நகரத்தான் அனுபவிப்பது என்பது கூடாது! அப்படியானால், கிராமத்தான் சூத்திரன்; நகரத்தான் பார்ப்பானா? யாரும் யாரையும் சுரண்டிப் பிழைக்க இடமிருத்தல் கூடாது. பலர் உழைத்துச் சிலர் சாப்பிடும் வர்க்க பேதம் அடியோடு ஒழிய வேண்டும். இதற்குத் துணையாகக் கூட்டுறவு உணர்வு வளர வேண்டும்" என்று பெரியார் கருத்தினைத் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் தஞ்சையில் 13 ந் தேதி நடைபெற்ற தி.மு.க பேரணி ஒன்றினைத் தஞ்சை கீழவீதி பெரியார் இல்லத்திலிருந்து, கண்டு மகிழ்ந்தார். அதனைக் குறிப்பிட்டு அவர் உரையாற்றுகையில் "நானும், பேராசிரியரும், மன்னையும் திராவிடர் கழகக் கட்டடத்திலிருந்து இன்றைய பேரணியைக் கண்டோம். தமிழ்ச் சமுதாயத்திற்கு