பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

631


ஓர் ஆபத்து வருமானால், அதைத் தவிர்பதற்கோ , அதிலிருந்து விடுபடுவதற்கோ, அதிலிருந்து தமிழ் சமுதாயத்தைக் காப்பதற்கோ தி.மு.க.வின் பாசறைக் களங்களிலே ஒன்றாகத் தி.க. இருக்கும் என்பதற்கு இது அடையாளமாகும்" என்றார். நாகையில் வி.பி.கே. காயாரோகணம் பிள்ளையின் சிலை திறப்பு விழாவில் பெரியார் கலந்து கொண்டு, அவர் தமது சிறந்த நண்பர்: நீதிக்கட்சிப் பிரமுகர் என நினைவு கூர்ந்தார், 22.4.73 ல்.

பெரியாரின் பாசஉணர்வினைத் தூண்டிவிட்ட நிகழ்ச்சி ஒன்று, 28.4.73 மாலை 5.30 மணிக்குத் திருச்சி பெரியார் மாளிகையில், ரா. நிர்மலா (ஆசிரியர்) இரா. சிவசுப்ரமணியம் D.E.E (பொறியாளர்) ரா. அலமேலுசு. இரத்தினம்.(மின் வாரியம்) ஆகியோருக்குத் திருமணம். அழைப்பாளர் யார் தெரியுமா? ஈ. வெ.ராமசாமி - ஈ.வெ.ரா. மணியம்மையார் வீட்டுத் திருமணம் இது? அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திருமணம்! ரா. நிர்மலா 14 ஆண்டுகளாய் அங்கு வளர்ந்து, அங்கேயே ஆசிரியப்பணிபுரியும் பெண். ரா. அலமேலு 12 ஆண்டுகளாய் இல்லத்தில் வளர்ந்த பெண். இவர்கள் திருமணமாகிப், போன பொழுதில் பெரியார் கண்கலங்கிய புதுமையை உலகு கண்டு வியந்தது “ஞானியரும் மறப்பரோ மக்கள்மேற் காதல்?” என்று!

30.4.73 அன்று புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 82 வது பிறந்த நாள் விழா. ஆளுநர் சேதிலால் கவிஞரின் சிலையினைத் திறந்து வைத்தார். 1.5.73 அன்று சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் பேராசிரியரும், தலைசிறந்த பகுத்தறிவாளருமான சி. வெள்ளையன் அகால மரணமடைந்தார். அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், ' பேராசிரியர் அன்பழகன் ஆகியோரும் இடுகாட்டில் இரங்கலுரையாற்றினார். மகளிர் பாலிடெக்னிக் பிரின்சிபலான அவரது துணைவியார் சுந்தரி வெள்ளையனுக்கு அன்பர்கள் அனுதாபம் தெரிவித்தனர். 13 - ந் தேதி ஆத்தூர் மாவட்டம் ஆரகளூரில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். பண்டரிநாதன் அய்.ஏ.எஸ் தலைமையில், அமைச்சர் எஸ் ராமச்சந்திரன், வெள்ளையன் படத்தினைத் திறந்து வைத்தார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில், பேராசிரியர் வெள்ளையன் அறக் கட்டளை நிறுவுவதற்காகப் பெரியார் 29.8.73 அன்று 1,000 ரூபாய் வழங்கினார்.

“சேரன் போக்குவரத்துக்கழகம், தொழிலாளர்களுக்கு முதலீட்டிலும், நிர்வாகத்திலும் பங்கு அளிக்க எடுத்திருக்கிற துணிச்சலான ஒரு திட்டத்தைப் பற்றி அறிந்து, பெருமகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க அரசாங்கம் சாதித்துவரும் பெரும் மவுனப் புரட்சிகளில் இது சரித்திர சாதனை என்பேன்.