பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

632

பகுத்தறிவு பகலவன் தந்தை



நான் கடந்த 40 ஆண்டுகளாக இதை என்னுடைய கொள்கையாகச் சொல்லி வருகிறேன். 1944ல் சேலத்தில் நடத்திய மாநாட்டில் - இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு வேண்டும். அவர்களுக்கு நிர்வாகத்திலும். உரிமை வேண்டும் என்னும்படியாக ஒரு தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறோம்.

இது ஒன்றுதான் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற எல்லா வகையான கெடுதல்களுக்கும் முடிவான மருந்தாகும். இது தொழிலாளிகள் நடுவில் கட்டுப்பாட்டு உணர்ச்சியையும், பொறுப்பையும் ஏற்படுத்தும்; தொழிலாளி வர்க்கத்தை இனி யாரும் சுரண்ட முடியாது.

நம்முடை சேரன் போக்குவரத்துக் கழகத்திற்கும், ஆற்றலும் சொல்திறனும் ஒருங்கே அமைந்த நமது மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போலத் துடிப்பும் திறமையும் வாய்ந்த இளைஞர் நமது போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு எஸ். இராமச்சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவிக்கிறேன்.

இது போன்ற செயற்கரிய காரியத்தை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். - ஈ.வெ. ராமசாமி."

5.5.73 அன்று பெரியாரின் இந்த வாழ்த்துச் செய்தி, கோவையிலுள்ள சேரன் போக்குவரத்துக் கழக மேனேஜிங் டைரக்டர் என். திருஞான சம்பந்தம் அவர்கட்கு அனுப்பி வைக்கப்பட்டது. .

சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து, 8ந் தேதி ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் கே. எஸ். பழனிச்சாமிக் கவுண்டர், போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதுபோல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் முன்சீப் தேர்வு நடைபெறும் முறைகளைப்பற்றி ஏதோ குறை கூறிப் பேசினாராம். “நம் கையே நம் கண்ணைக் குத்துவதா? தமிழர் சமுதாயம் சாண் ஏறினால் முழம் சறுக்குவது இதனால்தான்? தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடினாரே, அது இந்தக் குணந்தானா?" என்று கேட்டது “விடுதலை". சட்ட அமைச்சர் மாதவனும் இந்தத் தவறான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

13.5.73 அன்று ஈ.வெ.கி. சம்பத்துக்கு மார்வலி ஏற்பட்டுச் சென்னை அரசினர் பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த அவரது இரண்டாவது தம்பி கஜராஜ் அங்கேயே தனது 35 வது வயதில் அகால மரணமடைந்தார். அவரது சடலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டது. செய்தி கிடைத்ததும், கொடைக்கானலில் இருந்த பெரியாரும் மணியம்மையாரும் உடனே புறப்பட்டு ஈரோடு சேர்ந்தனர். திண்டுக்கல் நாடாளுமன்ற