பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

633


இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் கட்சியான அண்ணா தி.மு.க வேட்பாளா மாயத்தேவர் வெற்றி பெற்றார். வாக்கு விவரம் அ.தி.மு.க. 2, 60, 930; காமராஜர் காங்கிரஸ் 1, 19, 032; தி.மு.க 93, 496; இந்திரா காங்கிரஸ் 11,423."திண்டுக்கல் தீர்ப்பு என்பது திண்டுக்கல் மக்களின் தீர்ப்புதானே தவிர, நாட்டு மக்களின் தீர்ப்பாகி விடுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி, அரசியலில் அல்ல" என்றார் முதல்வர் கலைஞர். அமைச்சர் ப.உ. சண்முகம் "திண்டுக்கல் இடைத்தேர்தலில் வலது, இடது ஆகிய இரு கம்யூனிஸ்டுகளும் ஒரு நடிகரின் பின்னால் ஓடுவதா?” என்று கேட்டார்.

திண்டுக்கல் தேர்தல் முடிவு எதிர்பாராதது. காரணம் இன்னது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நம்முடைய ஜனதாயகம் இப்படி எல்லாம் இருக்கிறது. இதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஒன்றும் முழுகிப் போகவில்லை . அதனால் பெரிதாக இதைப் பற்றியாரும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இதில் ஒன்றும் அரசியல் இல்லை ” என்று 22 ந் தேதி “விடுதலை" முதல் பக்கப்பெட்டிச் செய்தி கூறியது.

சென்னையில் பல்லவன் போக்குவரத்துக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கச் சார்பில் வி.பி. ஹாலில், தொழிலாளருக்கு லாபத்தில் பங்கு தரும் செயலைப் பாராட்டும் விழா 25ந் தேதி நடந்தது. முதல்வர் கலைஞரும், அமைச்சர் எஸ். ராமசந்திரனும் பேசியதும், பெரியார், “எந்த மாநில அரசுமே செய்யத் துணியாத, லாபத்தில் - நிர்வாகத்தில் பங்கு தரும் திட்டத்தைத் தொழிலாளர் நலன் கருதும் தி.மு.க அரசு, தமிழ் நாட்டில் புரட்சித் திட்டமாக நிறைவேற்றி இருக்கிறது! நாட்டில் கடைசியாக ஒரு முதலாளி இருக்கின்ற வரையில், ஒரு தொழிலாளி இருப்பான். அதுபோல, ஒரு பார்ப்பான் இருக்கின்ற வரையில், ஒரு சூத்திரன் இருப்பான். எனவே இவற்றைக் கவனமாக ஒழிக்க வேண்டும். தொழிலாளிகள் லாபத்தில் பங்கு வாங்கினால் மட்டும் போதாது; மூட நம்பிக்கைகளைக் கைவிட்டுப் பகுத்தறிவு வாதிகளாக விளங்க வேண்டும்” என்று அறிவுரை புகன்றார்.

அடுத்த நாள் பெரியார் நெய்வேலியை அடுத்த காட்டுக் கூடலூரில், “பொது மக்களின் சிந்தனையைக் கெடுக்கும் சினிமா மோகம் அறவே ஒழிய வேண்டும். இது எவ்வளவு தூரம் முற்றியிருக்கிறது என்றால், திண்டுக்கல் தொகுதியில் எம்.ஜி.ஆரின் எச்சில் பட்ட சோடா, கலர் பானங்களைக் குடிக்கும் முட்டாள்தனமான ஒட்டர்கள் நாட்டில் இருக்கின்றார்களே - இந்தப் பைத்தியகாரத்தனம் வளர்ந்திருக்கிற நிலைக்கு நாடு கெட்டுப் போயிருக்கிறதே?" என்று பெரிதும் மனவேதனையுற்றார் பெரியார். 28.3.73 அன்று மணியம்மை-