பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

685


தலைவர் மணியம்மையார் வெளியில் இருந்தார். பொதுச் செயலாளர் வீரமணி, "விடுதலை" மேலாளர் என்.எஸ். சம்பந்தம், மணியம்மையாரின் தம்பி தியாகராஜன், சைதை எஸ்.பி. தட்சணாமூர்த்தி, வக்கீல் துரைசாமி உள்ளிட்ட 33 தி.க. தோழர்கள் சென்னை மத்திய சிறையில் “மரியாதை" பெற்றவர்கள் பட்டியலில்!

திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கலைஞர் வெளியில் இருந்தார். முரசொலி மாறன், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்லாயிரம் தி.மு.க. முன்னணியினர் சிறைக்கோட்டங்களில் இருந்தனர். சென்னை மத்திய சிறையில் "மரியாதை" பெற்றவர்கள் பட்டியலில் மு.க. ஸ்டாலின், சிட்டிபாபு, நீலநாராயணன், ஆர்க்காடு வீராசாமி, ஆர்.டி. சீத்தாபதி, டி.கே.கபாலி எண்ணற்றோர்! எண்ணற்றோர். 1976 பிப்ரவரி முதல், 1977 ஜனவரி முடிய இருண்ட காலம்; மருண்ட காலமாகவும், சிலர் உருண்ட காலமாகவும், இது பின்னர் மாறியதல்லவா?

1976 செப்டம்பர் 17. பெரியாரின் 96வது பிறந்த நாள் விழா. அவர் இருந்தால் எவ்வளவு குதூகலமாயிருந்திருக்கும்? ஒருவேளை, இந்த இருளே தமிழகத்தில் படர்ந்திருக்காதோ? அட்வைசர் ஆட்சி என ஒன்று வந்து, தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தை ஒரு நூற்றாண்டு பின்னோக்கித் தள்ளியிருக்காதல்லவா? எது நடந்தால் என்ன? கழகமும் கம்யூனிஸ்டுகளும் தான் பாதிக்கப்பட்டனர். தவறு. தவறு! திராவிடர் கழகம் துன்புறுத்தப்பட்டது. திருவாரூர் கே. தங்கராசு, சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, இன்னும் சிலர் தாங்களும் திராவிடர் கழகம் என்று தனியே சென்று, அன்னை இந்திராகாந்தியின் ஆதரவும், பத்திரிகை-வானொலியும் விளம்பரமும் பெற்றனர். |

திருவாரூர் தங்கராசுவுக்கு ஏதோ மனக்குறை என்று அறிந்து, அவர் விருப்பப்படியே, தலைவர் மணியம்மையாரையும் வீரமணியையும் விட்டுக் கொடுக்கச் செய்து, பிளவு வராமல் தடுக்க, முதல்வர் கலைஞர் தமது முதல்வர் எனும் நிலைக்கும் மீறிய சமாதான முயற்சிகளில் இறங்கியும், பிடிவாதமாகத் தங்கராசு, பிரிந்தே சென்றார்.

அதே போல, அண்ணா நிறுவிய திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாச் சோதனை, வேதனைகளுக்கும் உள்ளாயிற்று. இதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரிவடைந்து, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகி, பிரதமர் இந்திராவின் ஆதரவுக்கு ஆட்பட்டது. வலதுசாரிக் கம்யூனிஸ்டுகளும் அம்மையாரின் கனிவுக்கு ஆளாயினர்.