பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

703


சுதந்தர உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக் கொள்ளக் கூடியவைகளை ஒப்பித், தள்ள வேண்டியவைகளைத் தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரில்தான் நான் எதையும் தெரிவிக்கின்றேன்” என்கிறாரே; இவர்தாம் பெரியார்.

“சுயமரியாதை இயக்கம் என்கிற இஞ்சினைப் பலப்படுத்தி, அது சரியாக ஓடத், தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால், பிறகு எந்த இயந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத், தோல்பட்டையை மாட்டிவிட்டாலும், அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் (Government) இருக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கும் வேண்டியதில்லை”

எவ்வளவு நம்பிக்கையோடு நவிலப் பெற்ற தெம்பூட்டும் மொழிகள் இவை! பெரியார் தவிர வேறு யாரால் சொல்ல இயலும்?

இந்தியாவில் இந்திரா ஆட்சி உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது, பத்திரிகைத் தணிக்கை முறை அமுலானபோது, மிசா சட்டத்தின் கீழ் பல கட்சித் தலைவர்கள் சிறையிடப்பட்டபோது, பச்சைத் தமிழர் காமராசர் மனம் வெதும்பி மறைந்த போது, தனித் தமிழராட்சியை டிஸ்மிஸ் செய்து - முதன் முறையாகத் தமிழகத்தில் குடிஅரசுத் தலைவராட்சி அமுலானபோது, அட்வைசர்கள் எனும் பார்ப்பன அதிகாரிகள் தந்தை பெரியாரின் 60 ஆண்டு உழைப்பின் பலனை அழித்தொழித்த போது, சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்ட போது, தி.க., தி.மு.க. தலைவர்கள் பலரைச் சிறையிலிட்டு அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தபோது, ஓராண்டுக்கு மேலும் கொடிய அடக்குமுறை ராணுவ ஆட்சிபோல் தலை விரித்தாடியபோது, அனைத்துக்கும் முடிவு கட்டுவது போல், மத்திய ஆட்சியில் காங்கிரஸ் ஒழிந்து - சுதந்திரம் பெற்ற 30 ஆண்டுக் காலத்திலேயே முதன் முறையாக ஜனதாக்கட்சி அரசுக்கட்டிலில் அமர்ந்த போது, மாநிலத்தில் அய்யா-அண்ணா வழி என்று சொல்லிக் கொள்ளும் திராவிட பாரம்பர்ய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியே ஆளவந்த போது, இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய மணியம்மையாரை இழிவுபடுத்தியபோது, இந்திரா காந்தியைக் கொல்ல முயன்றதாக அரசு வழக்குத் தொடுத்தபோது, மணியம்மையார் மறைந்தபோது, பிற்பட்டோராகிய சரண்சிங் பிரதமரான போது. வகுப்புரிமைக்கு மாநில அரசு குழி பறித்தபோது -அய்யோ, பெரியார் இல்லையே! என்று தமிழகம் விடுத்த ஏக்கப் பெருமூச்சு காதில் கேட்டிருக்குமே!

எங்கே அந்தப் பெரியார்?
 எங்கே ?
எங்கே தந்தை பெரியார்?