பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எதிர்க்கக்கூடாது என்பதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், அதிதீவிரவாதிகள் எல்லாம் சேர்ந்து, (Nationalist Association) அதிதீவிரவாதிகள் சங்கம் ஏற்படுத்தி, சேலம் விஜயராகவாச்சாரியார் தலைவராகவும், ராஜாஜி செக்ரட்டரியாகவும் நான் வைஸ் பிரசிடெண்ட் ஆகவும் இருந்திருக்கிறேன்.

காந்தியார் தலைமையில் வீறுநடை போடத்துவங்கிய காங்கிரஸ் மகாசபையின் ஒத்துழையாமை இயக்கம் ஈ.வெ.ரா.வை மெத்தவும் கவர்ந்திழுத்தது. தமக்கு எப்போதும் மிகப்பிடித்தமான கொள்கைகளாகிய தீண்டாமை விலக்கு, சாதிபேத ஒழிப்பு, மதுவிலக்கு, நீதிமன்றப் புறக்கணிப்பு, பள்ளிக்கூட பகிஷ்காரம், உத்தியோக விலகல் ஆகிய திட்டங்களில் அவர் மனம் பறிகொடுத்தார். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து, நாடெங்கும் பிரச்சாரத்திற்காகத் தாமும் கிளர்ந்தெழுந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு உயிர் கொடுக்க, உயர் பதவிகள் இருபத்தொன்பதை ஒரே நாளில் விட்டொழித்தார். பரம்பரைத் தொழிலான மண்டி வாணிபத்தை, வருமானம் தரும் கருவூலத்தை, பஞ்சாலையை, யோசிக்காமல் மூடிவிட்டார். சொத்துசுகம் அத்தனையும் பித்தம் வளர்க்கும் வித்தெனமதித்துப், பதறாமல் சிதறாமல், கதறாமல் கலங்காமல், துறந்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் இயக்கம் என்ற தரு வளர்வதற்கான மூல விதையைக் கரத்தினில் ஏந்தி, மண்ணில் விதைத்துத், தண்ணீர் வார்த்து, அது முளைவிட்டு இலைவிட்டுக் கிளைவிட்டு, ஆணிவேர் சல்லிவேர் பரப்பி, ஆல விருட்சமாய் விழுதுகள் இறக்கித், தழைத்துச் செழித்துக் கொழுத்துப் படர ஒரே காரண கர்த்தாவான ஈ.வெ. ராமசாமி புறப்பட்டார் 1920-ல்!