பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
6. துணிந்தார்
காந்தியார் திட்டங்களை ஏந்திப் பரப்பியது - கதராடை, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு - பிரச்சாரமும் போராட்டங்களும் - வைக்கம் வீரர் - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கை ஏற்காத காங்கிரஸ் தனக்கும் ஏற்காது என நீங்குதல் - 1920-ஆம் ஆண்டு முதல் 1925 - வரை.

காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையினை மொத்தமாக வரவேற்று அத்தனை பதவிகளையும் சித்தங்குலையாமல் உதறிய ஈ.வெ.ரா., காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களான கதராடை அணிதல், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய முப்பெரும் கோட்பாடுகளை முழு மூச்சுடன் ஆதரித்தார். அவற்றை மும்முரமாய்ப் பிரச்சாரம் செய்திடவும் முனைந்து முடிவெடுத்தார். ஒத்துழையாமைக் கொள்கை வெற்றிகரமாய் நடத்தப்பெறத் தாமே முன்னுதாரணமாய் விளங்கிட எண்ணினார். நீதிமன்றங்களைப் புறக்கணித்தலே அதன் செயற்பாடாகும். தமது குடும்பத்துக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான ரூபாய்க் கடன் தொகைகளைக் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்ததால், அவ்வளவு பெருந்தொகை இழக்க நேர்ந்தபோதும் ஈ.வெ.ரா. உள்ளத் தளர்ச்சி கொள்ளவில்லை. சேலம் பிரபல வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார் அந்தக் கடன் பத்திரங்களைத் தனக்கு மாற்றித் தருமாறும், தான் எப்படியும் வரவழைத்துவிட இயலுமென்றும் பேசியபோது, அது தமது கொள்கைக்கு முரணாகும் என மறுத்துரைத்தார் இந்த மாபெருந் தியாகி! விஜயராகவாச்சாரியார் இதைப் பலரிடத்தும் வியந்து போற்றினார்.

மாளிகை வாசமும், சாரட்டுச் சவாரியும், பட்டுச் சொக்காயும், பகட்டான உடைகளும், அறுசுவை உண்டியும், அரசர்போல் வாழ்வும் ஒரே நொடியில் ஒதுக்கித் தள்ளினார். எளிய வாழ்க்கையை வலிய மேற்கொண்டார். வீட்டைத் திருத்தி நாட்டையும் திருத்த விழைந்தார். நேர்மையான நன்னடத்தை, கூர்மையான பகுத்தறிவு, வாய்மையான

கவிஞர் கருணானந்தம்