பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

76


நல்லொழுக்கம்; தூய்மையான பொது வாழ்வு; பரம்பரைப் பணக்காரரான சீமான்களிடையே காண இயலாத இந்தப் பெருந்தன்மையான மனப்பக்குவம்; முன்பே ஒரு முறை வீட்டைத் துறந்து வெளியேறி, நாட்டில் வலம் வந்ததால் பெறப்பட்ட உரமான அனுபவம்; ஏறத்தாழ நாற்பது வயது நெருங்கி விட்டதால் ஏற்பட்ட தெளிந்த முதிர்ச்சி; ஏதாவது புதுமையினைச் செய்து நாட்டோரின் அவல வாழ்வை மேம்படுத்திட வேண்டுமெனும் நாட்டம் - அனைத்துக்கும் இருப்பிடமாக நினைத்ததை முடித்திடுவோம் என்ற உறுதியின் பிறப்பிடமாக இருந்த ஈ.வெ. இராமசாமியைக் காந்தியடிகளின் அறவழிப் போர் முறைகள் ஈர்த்ததில் வியப்பில்லை யன்றோ?

அந்நியத்துணிகளை அறவே விலக்கினார்; பட்டுப் பீதாம்பரங்களை எட்ட எறிந்தார்; முரட்டுக் கதராடைகளையே எளிமையாக உடுத்தினார். வழக்கம்போல் தமது கொள்கைகளைத் துணைவியாரும், தாயாரும், தங்கையாரும், மற்றுமுள்ள சுற்றத்தாரும், கெழுதகை நண்பர்களும், உழுவலன்பர்களும் பின்பற்ற வேண்டுமென அன்புக் கட்டளை பிறப்பித்தார். 80 வயது நெருங்கிய, சீமான் வெங்கட்ட நாயக்கரின் பார்யை, சின்னத்தாயம்மையாரும் சாமான்யக் கதர்ப் புடவை உடுத்தத் தொடங்கினார் எனில் பிறரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? தக்ளியும் ராட்டையும் கைகளில் சுழலத் தொடங்கின. இராமசாமியாரின் கால்களும் தமிழ்நாடு முழுதும் சுழலத் தொடங்கின.

கட்டித் தங்கத்தைத் தட்டிக் தகடாக்கி மெருகேற்றினாற் போன்ற ஆடகப் பசும்பொன்னிற மேனி, செல்வத்திரட்சியால் வளர்ச்சி பெற்ற உருட்சியான உடல், செழுமையின் வளமைகாட்ட முன்னோக்கி எழுந்த இளந்தொந்தி, பரம்பரையாய் இளமையிலேயே கருமை மறைய, வெண்பஞ்சுப் பொதிபோல் வெளுத்துச் சுருண்டு அடர்ந்த தலைமுடி, தருக்கினைச் சுருக்கென உணர்த்திடும் முறுக்கிய பெருமீசை, அறிவுமிகுதியின் வரைவு காட்டிடும் அகன்றுயர்ந்த நெற்றி, நீண்டு அகன்ற பெரிய மூக்கு, மயிரடர்ந்து அறுகம்புல் வரிசையென அழகூட்டும் புருவங்கள், ஆழ்ந்து ஒளிரும் அருள் சூழ்ந்த இருபெருங் கருவிழிகள், அழகான, மென்மையான சிவந்த உதடுகள், செயற்கைப் பற்கள், கட்டை விரல் நீண்டு சிறிது வளைந்தும் பிறவிரல்கள் நீண்டும் தொங்கிடும் கரங்கள்! மேதாவிலாசத்தை விளக்கிடும் கவர்ச்சியும் எழுச்சியும் உணர்ச்சியும் மிகுந்த தோற்றத்தையுடைய ஈ.வெ.ரா. மேடையேறிவிட்டால் அங்கே சிங்கத்தின் கர்ச்சனைதான் கேட்கும்!

தர்க்கத்தில் வல்லவர்; குதர்க்கத்திலுந்தான்! வாதத்தில் தேர்ந்தவர்; பிடிவாதத்திலும், தேவைப்பட்டால் விதண்டாவாதத்திலுந்தான்! சொல்லடுக்கில் சோர்விலாதவர்; கல்லெடுக்க நினைத்தால் மூக்குடைப்பார் - மற்போரால் அல்ல சொற்போரால்! சமுதாயத்தின்