பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அடித்தளத்து மக்கள்; அடிமைப்பட்டு மாக்களாக மாறினாற்போல் ஊக்கமின்றி உட்கார்ந்து உறங்கிச் சாகும் தேவாங்கு போன்றோர்; பஞ்சை பராரிகள், பாமரர்கள், எத்தர், ஏமாற்றுவோர் யார் எனப் புரிந்து கொள்ளுந் திராணியற்றோர்; ஒளி தெரிய வழியுண்டா எனத் தலையுயர்த்திப் பார்க்கவும் தென்பு அற்றோர்; பொதி சுமக்கும் மாடுபோல் அந்நியரின் வரி சுமக்கும் வக்கற்றோர், வகையற்றோர், திக்கற்றோர் இவர்களின் நாடிநரம்பெலாம் தடவிப் பார்த்து, இருதயத்தில் சுருதி மீட்டி, இன்னிசை எழுப்பிடும் தன்னிகரில்லா வன்மை படைத்தவரானார் இராமசாமி. மேடையிலே ஏறி, அவர்கள் மொழியிலே, அவர்களுக்காக, அவர்களது பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அவர்களுடைய உயர் வாழ்விற்காக அவர் பேசத் தொடங்கினால்... ஆவென வாய் பிளந்து, ஓய்வெடுக்க மறந்து, உண்டி மறந்து, உறக்கம் துறந்து, அலுப்பின்றிக் களைப்பின்றி, நான்கு மணி நேரம் ஐந்து மணி நேரம் தமது செவிக்குணவு பெறுவர் தமிழ்நாட்டு மாந்தர். கூட்டம் முடிந்ததும் சீமைத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்திடும் துணிவு பிறக்கும்! கதராடை புனையும் தெளிவு பிறக்கும். கையில் ராட்டினம் ஏந்திட அறிவு பிறக்கும். அத்தனை பேரும் ஈ.வெ. ராமசாமியின் அன்புத் தொண்டராய் மாறுவர். கதர் அணிவதையே காங்கிரஸ் கட்சியின் திட்டமாய்க் கொள்கையாய் மாற்றியவர் ஈ.வெ.ரா. கதர்த்துணி மூட்டைகளைத் தோளிலும், கைராட்டையைக் கரங்களிலும் சுமந்து திரிந்து அலைந்து தமிழ்நாட்டில் அவர் பாதங்கள் படாத கிராமிய மண்ணே இல்லை எனலாம்! காங்கிரசில் இல்லாதவர்கூடக் கதராடை அணிந்து வருவதை இன்றுந் தமிழ்நாட்டில் காணலாம். இது ஈ.வெ. ராமசாமியின் கைங்கர்யம் எனில் மிகையன்று! தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கதர்த்துணி அங்காடிகள் அவரால் திறக்கப்பட்டவையேயாம். கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி, ஈ.வெ. ராமசாமியிடம்தான் திருச்செங்கோடு “கதர்” அங்காடியில் வேலைக்கு அமர்ந்தார் முதலில். கதர்த்திட்டம் இராமசாமிக்குப் புதியதென்றாலும், காந்தியடிகளின் மீது கொண்ட கரைகாணாப் பற்றினால், கொண்ட கொள்கை மீது வைக்கும் நம்பிக்கையால், அதன் வெற்றியில் கொள்கின்ற வற்றாத அக்கறையால், நன்றி எதிர்பாராத நல்லுழைப்பால் தமிழ்நாட்டில் கதர்த்திட்டம் வெற்றிகரமாய் வேரூன்றி விட்டது!

காலையில் எழுந்தவுடன் சாதாரண ஃபிரேமுக்குள் அடங்கிய வெள்ளெழுத்துக் கண்ணாடியை எடுத்து மூக்கின்மீது வைத்து இழுத்துக் காதில் மாட்டிக்கொண்டு, கையில் இந்து, சுதேசமித்திரன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளை வரிவிடாமல் படித்து முடித்திடுவார். அப்போதே அன்றைய மேடைச் சொற்பொழிவுக்கான கருத்துகள் மூளையில் பதிவாகி விடும். அற்புதமான நினைவாற்றலால், அவை கற்பனையும் கதையுமாய்ப் பழமொழி உவமைகளுடன் கூடிக்-