பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

92


கதரை ஆதரித்தே எழுதி வந்தார். ஆனால் சுயமரியாதை மேடைகளில் காந்தியாரின் சமுதாயக் கொள்கைகளை மட்டும் கடுமையாகக் கண்டித்து வந்தார். ஏன்?

தான் பெற்ற மகனைத் தாயார் தோள் மீதும் மார்மீதும் தூக்கியணைத்துப், பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவனைக் கண்ணேபோல் காத்து ஆளாக்கி வருகையில்; வளர்ந்த பின்னர் அதே மகன், தாயாரை மானபங்கம் செய்து, அவள் சொல்லைத் துச்சமாய் வெறுத்தொதுக்கினால் அந்தத் தாயாரின் நெஞ்சம் படும்பாடு சொல்லத் தரமா? அஃதே போன்று, தமது சொந்த நலன்களை - வருவாயைத் - துறந்து, தமது மாளிகையிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் கதர் வஸ்திராலயத்துக்கும் இலவசமாய் இடந்தந்து, தமது தனிப்பட்ட பொருளைச் செலவு செய்து, குடும்பத்தாரோடு சிறை சென்று, அனைத்திந்திய மாநாடு ஒன்று தவறாமல் தாம் சென்றதோடன்றிக், காங்கிரசுக்கே வழிகாட்டியாய்த், தம் துணைவியார் நாகம்மையாரையும் அழைத்துச் சென்று. (அப்போதெல்லாம் பெண்டிரை மாநாடுகட்கு அழைத்துச் செல்லும் வழக்கம் நம் நாட்டில் இல்லை!) காங்கிரஸ் வேறு தாம் வேறல்ல என இரண்டறக் கலந்து நின்ற அதே நிறுவனம் - தமது சுயநலத்திற்காக அல்ல; இன நலத்திற்காக; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை என்ற துரோகச் செயலை ஈ.வெ. ராமசாமியால் எளிதில் சீரணித்துக் கொள்ள முடியவில்லை பார்ப்பனரல்லாத குடியில் பிறந்தவராதலால், தம்மால் தனி அன்புடன் ஆதரிக்கப்பெற்ற காந்தியடிகள், நிச்சயம் தம்மைக் கைவிட மாட்டாரென்று முழு நம்பிக்கையோடிருந்தார். அதுவும் தூள்தூளாய்த் தகர்ந்து தரைமட்டமான செய்தி அவருக்குத் தக்க சான்றுகளுடன் கிடைத்தது! என்ன அது?

வைக்கம் போராட்டம் நடந்தபோது, 1925 மார்ச்சில் திருவனந்தபுரம் வந்த காந்தியார், திருவாங்கூர் மகாராணியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் போராட்டத்தைக் கைவிடச் சொன்னார் என்பதும்; வேண்டுமென்றே தமது பத்திரிகையில் எந்த ஓரிடத்திலும், ஈ.வெ. ராமசாமியின் பெயரைக் குறிப்பிடாமலே வைக்கம் சத்தியாக்கிரக வரலாறு எழுதிவத்தார் என்பதும்; மனுதர்ம அடிப்படையில் அமைந்துள்ள வருணாசிரம தர்மத்தை காந்தியார் ஆதரித்திருக்கிறார் - அங்ஙனமாயின், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் போலியாகத்தான் சொல்கிறார் என்பதும், அனைத்துக்கும் மேலாக, அவர் பார்ப்பனர் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறார் என்பதும் 1927 -ஆம் ஆண்டில் இராமசாமிக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கின.

இருப்பினும், காந்தியாருடன் நேராக உரையாடினால் ஏதாவது நன்மை கிடைக்கலாம் என்று கருதி, 1927-ஆம் ஆண்டு ஆகஸ்டுத்