பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திங்களில் பெங்களூருக்கு வந்திருந்த காந்தியடிகளைக் கண்டு, கலந்து, விவாதம் செய்தார். இராஜாஜியும், தேவதாஸ்காந்தியும் பெங்களூரில் காந்தியடிகள் தங்கியிருந்த இடத்திலேயே உரையாடலுக்கு ஏற்பாடு செய்து, முன்வாயில் நின்று, வரவேற்று, காந்தியாரிடம் ஈ.வெ. ராமசாமியை அழைத்துச் சென்றனர். நாயக்கருக்குக் காங்கிரஸ்மீது என்ன கோபம் என்று காந்தியார் விசாரித்தார். இந்தியா விடுதலை பெறவேண்டுமானால் முதலில் காங்கிரசை ஒழிக்க வேண்டும்; இரண்டாவதாகச் சாதியை ஒழிப்பதற்கு, அதன் மூலகாரணமாக உள்ள இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்; மூன்றாவதாகப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் - என்று ஈ. வெ. ரா. வலியுறுத்திப் பேசினார்.

இன்னும் இரண்டு மூன்று முறை நாம் சந்திப்போம் என்றாரே தவிர, இவற்றை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் காந்தியார் இல்லை. ஏனெனில் அந்த அளவு ‘இராமசாமி ஒரு பிராமணத்துவேஷி; இனி அவரால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வளராது’ என அவரிடம் கோள் மூட்டியிருந்தனர். எனவே தாம் அன்றுவரை மிகுந்த மதிப்பு வைத்திருந்த காந்தியாரிடமும் விடைபெற்று, வேதனையோடு ஈ.வெ.ரா. வெளியே வந்துவிட்டார். விவரங்களைக் கீழேயிருந்த இராஜாஜியிடம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

பெரியார் காந்தியடிகளிடம் பிரிந்து வந்த செய்தியை அவர் மொழியிலேயே கேட்பது நலமாயிருக்குமே! “இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக் கூடியதல்ல. ஆதலால், இனி இதைப்பற்றி மகாத்மாவிடம் மறுபடியும் கலந்து பேசித் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்பதையும், மகாத்மாவிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதாயில்லை என்றும் சொல்லி, மகாத்மாவினிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். மகாத்மாவும், தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், இன்னும் இரண்டொரு தடவை இதைப் பற்றிப் பேசவேண்டும் என்றும் சொன்னார். எமது நண்பர் ஸ்ரீமான் இராமதாதன் அவர்கள்கூட, மகாத்மா சொன்னதுபோலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்றுகூடச் சொன்னார். இதற்கு உடனே நாம் ‘மகாத்மா நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றும்படித் திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாகக் கருதுகிறீர்களா?’ என்று கேட்டதில், ‘மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ளக் கூடியதாய் ஏற்படாது என்றும், ஒருகால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா