பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

94


இணங்கக் கூடியதானால், நமது பிரச்சாரத்திற்கு இன்னும் உதவியாக இருக்காதா?’ என்றும் சொன்னார். உடனே நாம் ‘அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும், மகாத்மாவைத் திருத்தும்படியாக நாம் சொல்லிச் சரிசெய்ய முடியாது என்றும், நம் அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியதுதான் நமது கடமை!’ என்றும் சொல்லி விட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாகத் திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்துவிட்டே உத்திரவு பெற்றுக்கொண்டு வந்து விட்டோம்!” (குடி அரசு தலையங்கம் 28-8-1927)

அதன் பின்னர் காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களையும் வன்மையாக எதிர்க்க ஆரம்பித்தார். மேலும், கதர்விற்பனை நிலையங்கள் ஈ. வெ. ராமசாமியால்தான் துவங்கப் பெற்றவை எனினும், இந்தக் காலகட்டத்தில் அனைத்தும் பார்ப்பனரின் வேட்டைக்களங்களாக மாறியிருந்தன! தீண்டாமை ஒழிப்பின் லட்சணமும் தெரிந்து போய்விட்டது! கள்ளுக்கடை மறியல் அல்லது ஒழிப்பு என்பதும், சிறிது காலத்துக்குப் பின்னர் வெட்டவெளிச்சமாகி விட்டது.

காந்தியார் தமது பிடிவாதமான வர்ணாசிரம தர்ம ஆதரவை, அடுத்த திங்கள் சென்னை வந்தபோதும் காட்டிக் கொண்டார். அங்கு நீதிக்கட்சியின் சார்பில் தம்மைச் சந்தித்துத், தமிழகப்பார்ப்பனரின் ஆதிக்க நிலையினை எடுத்துக் காட்டிய சர். ஏ.டி, பன்னீர் செல்வம், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் ஆகியோரின் நியாயவாதங்களையும் காந்தியார் புறக்கணித்து விட்டார்!

1926-ஆம் ஆண்டினிலே நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியும், சுயராஜ்யக் கட்சியும் போட்டியிட்டதில், எக்கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் நீதிக்கட்சி சார்பில் வென்ற குமாரமங்கலம் ஜமீன்தார் டாக்டர் பி. சுப்பராயன், கட்சிமாறி, சுயராஜ்யக் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியானார். அடுத்த ஆண்டிலேயே அந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், நீதிக் கட்சி ஆதரவுடன் நிலைத்துக்கொண்டார்.

1926-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈ.வெ.ரா. எந்தக் கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்காமல், பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுவோர் வெற்றிக்கே தமது ஒத்துழைப்பை நல்கினார். இதில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவில்லை. ஆனால் காங்கிரஸ்காரரான ராஜாஜி, நீதிக்கட்சியினராகிய பார்ப்பனரல்லாதார் வென்றுவிடக் கூடாதே என்ற உள்நோக்கத்தோடு, மறைமுகமாக