பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சுயராஜ்யக்கட்சியை ஆதரித்த போக்கு, ஈ. வெ. ராமசாமியின் அகக் கண்களை இன்னும் அகலத் திறந்துவிட்டது!

இந்தச் சமயத்தில், 1926-ல் மதுரையிலும், 1927-ல் கோவையிலும் இரு பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன. சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து வந்த ஈ.வெ.ரா. இவ்விரு மாநாடுகளிலும் பங்கேற்றார். வ.உ. சிதம்பரனார், திரு.வி.க., டாக்டர் வரதராசுலு, ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி, ஏ.பி. பாத்ரோ, குமாரசாமி ரெட்டியார், சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆறாண்டுகாலம் ஆட்சி செய்து, கிராமப்புறங்களில் பல்லாயிரம் துவக்கப்பள்ளிகளை நிறுவியும், அங்கே கட்டாயமாக ஆதித்திராவிடப் பிள்ளைகளை அனுமதிக்குமாறு சட்டங்கள் இயற்றியும், வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக்கி, மூன்று முறை 1921, 1922, 1924-ஆம் ஆண்டுகளில் அரசாணைகள் பிறப்பித்தும், இந்து அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் 1924-ல் நிறைவேற்றியும்; இனஇழிவை ஒழிக்கும் முறையில் தேவதாசிகள் ஒழிப்புக்குப் பாடுபட்டும் - திராவிட இனமக்களின் மேம்பாட்டுக்கு உழைத்துங்கூட, 1926-ல் பெருந்தோல்வியைத் தழுவிட நேர்ந்ததால் எதிர்கால வேலைத்திட்டத்துக்கு ஈ. வெ. ராமசாமியாரின் மேலான ஆலோசனைகளை வேண்டினர்; அவரும் நீதிக் கட்சியினர் மனந்தளர வேண்டாம் எனத் தெம்பளித்தனர். காங்கிரசில் அனைவரும் சேர்ந்து அதைக் கைப்பற்றிப் பார்ப்பனரல்லாதார் வசமாக்குவோம் என்றும் சிலர் யோசனை தெரிவித்தனர். அதனால் பயன் விளையாது என ஈ.வெ.ரா. மறுத்ததோடு முதலில் நம்மிடமுள்ள மூட நம்பிக்கை, அறிவீனம் இவற்றை நீக்கி, நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்வினை உண்டாக்குவோம். பிராமணன் உயர்ந்த ஜாதி என ஒப்புக்கொள்வதாலேயே நாம் சூத்திர ஜாதி; பிராமணனது வைப்பாட்டி மக்கள் என நாமே ஒப்புக்கொள்கிறோம். முதலில் சுயமரியாதை பெறுவோம். அஃதில்லாமல் நமக்கு ஆட்சி எதற்கு? கட்சிகள் எதற்கு? என விளக்கமுரைத்தார். வீழ்ந்துவிட்ட இனத்துக்குப் புத்துணர்வும், புதிய எழுச்சியும் ஊட்டிட ஒரு ஈ.வெ.ரா. பிறந்தாரே எனத் தென்னகத்துப் பெருங்குடிமக்களின் அருங்குணத் தலைமையாளர்கள் பூரிப்பு எய்தினர். இந்தி தேசிய மொழி என்ற காங்கிரஸ் கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதைப் பரப்பிடக் காங்கிரஸ்காரர்கள் முனைவதைச் சுட்டிக்காட்டி இந்த மாநாடுகளில், இந்தி பொதுமொழி என்ற வாதத்தினை எதிர்க்கும் கொள்கையை ஈ.வெ.ரா. முதன் முதலாக அறிவித்தார்!

கள்ளுக்கடை மறியலுக்காக ஒருமுறை, கதர்ப் பிரசாரத்துக்காக ஒருமுறை, தீண்டாமை ஒழிப்புக்காக இருமுறை சிறை சென்ற ஈ.வெ.ரா. 1927-ஆம் ஆண்டில் தொழிலாளர்க்காக ஒருமுறை சிறை