பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

96


செல்லும் வாய்ப்பு நேரிட்டது. நாகைப்பட்டினத்தில் அது வரை இயங்கிவந்த தென்னிந்திய இருப்புப்பாதையின் பெரிய பணிமனை (ஓர்க்ஷாப்) திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்படுவதால் எழுந்த நடைமுறைச் சிக்கலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கிவிட்டது. 1926-ம் ஆண்டு நாகை சென்று, தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வெ.ரா. தொழிற்சங்கத் தலைவர்களாக வெளியாரை அனுமதிப்பதால், வருந்தீமைகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தார். ரயில்வேத் தொழிலாளரில் சில காங்கிரஸ்காரர்கள் இருப்பினும், அநேகர் ஈ.வெ. ராமசாமியிடம் பெருமதிப்புக் கொண்ட அன்புத் தொண்டர்களாவர். அப்போது நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஈ.வெ.ரா. நாகைப்பட்டினம் சென்று, தொழிலாளரை அமைதிப்படுத்தித், தமிழர் அரசுக்குத் தொல்லை தரவேண்டாம் என்றும், பார்ப்பனக் காங்கிரசார் சூழ்ச்சி வலையில் விழவேண்டாம் என்றும் அன்பான அறிவுரை புகன்றார். ஆனால் அவர் அஞ்சியது போலவே, அரசுக்குச் சங்கடம் தந்து குழப்பம் உண்டாக்கிட மாற்றார் திட்டமிட்டவாறே, தொழிலாளர்கள் கிளர்ச்சிகளை மும்முரமாக்கினர். வேலை நிறுத்தத்துடன் நில்லாது, பலாத்கார வன்செயல்களும் தலை காட்டின; தண்டவாளம் பெயர்த்தல், தந்திகளை அறுத்தல் ஆகியவை நடைபெற்றன! இந்தக் கட்டத்தில், வழக்கம் போல், வன்முறை தூண்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டார்கள். அதுவரை தொழிலாளர் பக்கம் போராடிவந்த ஏடுகள் திரும்பிக்கொண்டன. “குடி அரசு” வார இதழும், “திராவிடன்” தினசரி ஏடும் கடைசிவரை தொழிலாளர்க்காக உதவிவந்தன. ஈ.வெ.ரா. ஆதரவும், பொருளுதவியும் திரட்டித் தந்தார். கூட்டம் நடத்தத் தடை விதித்திருந்த நேரத்தில் தடையினை மீறிப் பொதுக்கூட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்துப் பேசினார்; ஈரோட்டில் 1928-ஆகஸ்டு 5-ஆம் நாள் சிறைபிடிக்கப்பட்டார்! ஜாமீனில் வெளிவர மறுத்ததோடு, எதிர் வழக்காடுவதில்லை எனவும், முடிவு செய்தார். மிகக் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ், அரசு வழக்குத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் நிறுத்தியது. தண்டனையை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் ஈ.வெ.ரா. மீது தொடுத்த வழக்கினை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது! ஏனோ?

1928-ஆம் ஆண்டு நவம்பரில் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயும், டிசம்பரில் பனகல் அரசர் ராமராய நிங்கவாரும் மறைந்தபோது, பெரியார் கண்ணீர் உகுத்து இரங்கல் கட்டுரைகள் தீட்டினார், “குடி அரசு” இதழில்.

1909-ல் மிண்டோ - மார்லி சீர்திருத்தமும், 1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமும் கொண்டுவந்த லண்டன் அரசு, 1927-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு மேலும் என்னென்ன உரிமைகள் வழங்கலாம்