பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


என்பதை நேரில் ஆராய்ந்து வருமாறு, சைமன் கமிஷன் என்ற ஒரு ராயல் சுமிஷனை நியமித்தது. இதில் இந்தியர்களில் யாருமே உறுப்பினராக நியமிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, இதனுடன் ஒத்துழைக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க விரும்பியது. நீதிக் கட்சி என்ன முடிவு மேற்கொள்வது என்ற திகைப்பில் ஆழ்ந்திருந்தது. அதே போல, இங்கிருந்த பிற அரசியல் கட்சிகளும் சைமன் கமிஷனை வரவேற்பதா, மறுப்பதா எனக் குழம்பிக் கிடந்தன. சென்னை மாகாண முதன் மந்திரியான டாக்டர் சுப்பராயனும் அவரது சுயராஜ்யக் கட்சி அமைச்சர்களிருவரும் செய்வதறியாது தயங்கியிருந்தனர். இந்நிலையில் மிகத் துணிவாகவும், தெளிவாகவும், இங்கு ஆராய்ச்சி செய்து அரசியல் நிலவரம் அறிந்து கொள்ள வருகின்ற சைமன் கமிஷனை வரவேற்று ஆதரித்தலே நமது கடமையென விளக்கி, ஈ.வெ.ரா. கட்டுரைகளும், துண்டு அறிக்கைகளும் வெளியிட்டு, மேடைகளிலும் முழங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் போல் சுயநலத்துக்குப் பாடுபடாமல், பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் பெரும்பான்மையாய், அடங்கி, ஒடுங்கி, ஆமையாய், ஊமையாய்க் கிடக்கின்ற இந்நாட்டு ஏழைப் பாமரனின் நலன்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்; என ஈ.வெ.ரா உருக்கமாக வேண்டினார்.

சுயராஜ்யக் கட்சித் தலைவரான பண்டித மோதிலால் நேரு சைமன் கமிஷனில் இந்தியர்களை நியமிக்காததே நல்லதென்றார். டாக்டர் அன்னிபெசண்ட் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்ற சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றார். இந்த அம்மையார் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார். 1920-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் செய்த சீர்திருத்தத்தையும் ஆதரித்தவர். வெள்ளையர் ஏற்படுத்திய சட்டசபையிலும் உத்தியோகங்களிலும் இருப்பது சுயமரியாதையா என்று உசாவினார் ஈ.வெ.ரா.!

சென்னைக்கு சைமன் கமிஷன் வந்தபோது, மாபெரும் மாற்றங்கள் ஈ.வெ. ராமசாமியால் விளைவித்துக் காட்டப்பெற்றன. காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குத்தான் எதிர்ப்பினைக் காட்டிற்றே தவிரக் காங்கிரஸ் பிரமுகர்கள் வெவ்வேறு பெயர்களில் சைமன் கமிஷனை வரவேற்றனர். தமது சக அமைச்சர்களின் ஒத்துழைப்பு இல்லாமலே முதன் மந்திரி டாக்டர் சுப்பராயன் வரவேற்றார். நீதிக்கட்சியினர் துணிந்து வரவேற்றனர். பழைமைப் போக்கினர், மதவாதிகள், சநாதனிகள், வழக்கறிஞர்கள் ஆகிய பார்ப்பனர் பிரதிநிதிகளும் வரவேற்றனர். சென்னையில் சைமன் கமிஷன் தனது பணிகளைச் செவ்வனே முடிப்பதற்கு ஈ. வெ. ராமசாமியின் துணிச்சலான பிரச்சாரமே காரணம்! துள்ளிக் குதித்த பார்ப்பன ஏடுகளின் துடுக்கினை அடக்கினார் வெற்றியுடன்! இதன் விளைவாக டாக்டர் சுப்பராயன் சுயராஜ்யக் கட்சியின் ஆதரவினை இழக்க