பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

98


நேர்ந்தது. மாறாக நீதிக்கட்சியினர் ஒத்துழைக்க முன்வந்தனர். சேதுரத்தினம் அய்யரும். 1927-ல் காங்கிரசிலிருந்து விலகி வந்த எஸ். முத்தையாமுதலியாரும் அமைச்சர்களாயினர். 1928-ஆம் ஆண்டில் எஸ். முத்தையா முதலியாரின் பெரு முயற்சியால் வகுப்பு வாரி உரிமை நடைமுறைக்குக் கொணரப்பட்டது. மட்டற்ற மகிழ்ச்சியில் பூரித்துத், திளைத்துத், களித்துத் தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்கு முத்தையா எனப் பெயரிடுங்கள் என்று கூறி வெகுவாகப் பாராட்டினார் ஈ.வெ.ரா.!

சுயமரியாதை இயக்கம் இதுவரை அமைப்புமுறை பெறாமல், மேடைகளிலும் ஏடுகளிலும் முழங்கப்பட்டுவந்த கொள்கைப் பிரச்சார இயக்கமாகவே இயங்கி வந்தது. இதற்கு, மேலும் வலியும் வளர்ச்சியும் ஏற்றிவிடும் வண்ணம், 1929-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17, 18 நாட்களில் முதலாவது சென்னை மாகாணச் சுயமரியாதை மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றது. பட்டிவீரன் பட்டிப் பெருமகனார் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். முதல்மந்திரி டாக்டர் சுப்பராயன் திறந்து வைத்தார். சர்.பி.டி. இராசன் என்னும் பொன்னம்பலம் தியாகராஜன் கொடி ஏற்றினார். இவர்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தின் மேலான கொள்கைகளை வரவேற்றும் இதனை உண்டாக்கிய மாபெருந் தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்களைப் பாராட்டியும் சிறப்பான உரைகளை நிகழ்த்தினார்கள். பத்தாயிரக்கணக்கில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுமியிருந்தனர். தமிழர் எண்ணிஎண்ணிப் பெருமையுறத்தக்க புரட்சிகரமான பல தீர்மானங்கள் அங்கு இயற்றப்பட்டன. சாதிப்பட்டங்களை விட்டு விடுதல்; மதக்குறிகளை உடலில் அணியாதிருத்தல்; புரோகிதத்தை அறவே ஒழித்தல்; கோவில்களில் இடைத்தரகர்கள் இல்லாமலும், பூசைக்காகக் காசு செலவில்லாமலும் ஏற்பாடு செய்தல்; எல்லாருக்கும் கட்டாயத் துவக்கக்கல்வி தருதல், தீண்டாமை ஒழிந்திட எல்லாப் பொது இடங்களிலும் தாழ்த்தப்பட்டவர் நுழையச் சட்டப்படி அனுமதி தருதல்; அரசு அலுவல்களில் முதலிடம் தாழ்த்தப்பட்டோருக்கே அளித்தல், புறம்போக்கு நிலங்களைத் தாழ்த்தப்பட்டோருக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகட்கும் வழங்குதல்; பெண்களுக்குச் சொத்துரிமை, வாரிசுரிமை, எந்தத் தொழிலையும் ஏற்று நடத்திடச் சமஉரிமை, 16 வயதுக்குப்பின் திருமணம் செய்ய, மணவிலக்குப்பெற, விதவை மறுமணம் புரிய உரிமை கொடுத்தல், துவக்கக்கல்வி ஆசிரியர்களாகப் பெண்களையே நியமிக்கல், ஏழை மாணாக்கர்க்கு இலவச உடை, உணவு, புத்தகம் தருதல்; ரயில்வே உணவு விடுதிகளில் சாதிப் பாகுபாடுகளை ஒழித்தல்; மத விஷயங்களில் அரசு தலையிடாமல் நடுநிலைமை வகிப்பதால், பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப் படுவதால், சட்டப்படி அவர்களுக்குப் பாதுகாப்புத் தருதல்......