பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

43



"இனிமேல் நீ பள்ளிக்கு ஒழுங்காக அண்ணனுடனேயே சென்று படித்துவிட்டு; அண்ணனுடனேயே திரும்பி வரவேண்டும்.

வழியில் எந்தக் கடையிலும்; யார் வீட்டிலும் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது. கீழ்சாதிக் குழந்தைகளுடன் சேரவே கூடாது. அவர்கள் வீடுகளுக்கு நீ போவது தெரிந்தால் அப்பா மிகவும் மன வருத்தப்படுவார். அவர்கள் வீட்டிலிருந்து தண்ணிர் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது.

ஏனென்றால் - மற்றவர்களை விட நாமெல்லாம்தான் மிக உயர்ந்த வைணவ வகுப்பைச் சேர்ந்தவர்கள்; நாம் கீழ்ச்சாதிக்காரர்களுடன் பழகுவதும்; அவர்கள் வீட்டில் ள்தையாவது வாங்கிச் சாப்பிடுவதும் நமது குலப்பெருமைக்கும்; சாதி கெளவரத்திற்கும் அவமானமல்லவா?

அதனால் -

இனிமேல் அம்மாதிரி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லு," என்று அன்போடு கேட்டார்.

அம்மா கூறிய அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமசாமி, "அம்மா, இனிமேல், உன் சொற்படியே நடக்கிறேன் அம்மா,” என்று உருக்கமாகக் கூறினார்.

பெற்றவளின் மனம் அப்படியே மகிழ்ந்து போயிற்று.

அருகிலிருந்த மகனை வாரி இறுக அணைத்துக் கொண்டு, சின்னத்தாயம்மையார், இராமசாமியின் உச்சியில் முத்தமழை பொழிந்தார்.