பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

63


இராமசாமி தண்ணீரை எடுத்துக் குடிக்கத் துவங்கும் போது, "எச்சில் பண்ணாமெத் தூக்கிக் குடிங்க," என்றாள் ஆசிரியரின் மகள்.

இராமசாமி அப்படியே செய்தார்.

அதன்பிறகு, இராமசாமி குடித்த டம்ளர் மீது இரண்டு மூன்று முறை நீர் ஊற்றிக் கழுவி சுத்தமானதாக எண்ணிய பிறகே அந்த டம்ளரை உள்ளே எடுத்துக் கொண்டு சென்றாள். ஆசிரியரின் மனைவி இதையெல்லாம் அருகிலிருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இராமசாமி அப்படியே குன்றிப் போனார்.

அந்த அம்மாளின் இந்தச் செய்கை, அவரது சுயமரியாதையை வெகுவாகப் பாதித்ததுடன்; மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டது போலவும் மனதை வெகுவாக வருத்தியது.

பள்ளி ஆசிரியர் வைதீகர், ஓதுவார் வகுப்பைச் சேர்ந்த சைவப் பிள்ளைமார். அவர் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர்.

இப்படிப்பட்ட ஆசிரியர் வீட்டில்; கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடிப்பதைவிட, காளியின் வீட்டில் மொண்டு குடித்து விட்டு வந்ததே அவர் மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது.

அதன் பிறகு -

அந்த ஆசிரியர் வீட்டை மட்டுமல்ல; அந்த உயர் சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவையே இராமசாமி புறக்கணித்தார். ஆனால், இன்று எப்படியோ வழிதவறி வந்துவிட்டார்.