பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

67


10. பள்ளி போயிற்று கடை வந்தது...

மனிதனுக்குக் கல்வி அவன் அறிவாளியாகும் லட்சியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும். படிப்பில் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். பகுத்தறிவிற்கு ஏன் பயப்பட வேண்டும்?

சிந்தனை அறிவு ஒன்றுதானே, உண்மையறிவாகக் கருதப்படக் கூடியது. வெறும் புத்தக அறிவு, அறிவாகி விடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா?

அறிவு வளர்ச்சிக்குக் கல்வி பயன்படவில்லையென்றால் வேதனையாகத்தானே இருக்கிறது!

வெங்கடப்பர் நொறுங்கிப் போனார். தன்னுடைய இரண்டு பிள்ளைகளைப் பற்றியும் அவர் ஏராளமான கனவுகள் கண்டு வந்தார்.

கலெக்டரைப் போல் பெரிய படிப்பெல்லாம் படித்து - வெள்ளைக்காரத் துரைகளைப் போல மிடுக்காக உடைகள் அணிந்து கொண்டு, பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களாகத் தம் மக்கள் பெயர் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

நம்பிக்கை நட்சத்திரமாகக் கண்ணும் கருத்துமாகப் படித்து வருபவர் கிருஷ்ணசாமி ஒருவர்தான். இராமசாமியைப் பொறுத்தவரை - அவனைப் பற்றிய ஆசைகளும் - எதிர்பார்ப்புகளும் அவர் மனதில் அடியோடு அஸ்தமித்து விட்டன.