பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

5



“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தினரை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டைமேற்கொண்டு அதேபணியாய் இருப்பவன்.”

நீலமணி அவர்கள் பெரியாரை அறிமுகஞ் செய்யும் ஒவ்வொரு வரிகளிலும் உண்மை ஒளிர்கிறது.

“தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாள் எல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர்-தந்தை பெரியார்” என்கிறார்.

உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர் பாய்ச்சிக் கதிர் அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால் அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும், அந்த ஏழை அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம்; சோற்றைத் தொட்டால் தீட்டு; எத்துணை பெரிய சோகம்.

ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து உச்சியில் கோபுரக் கலசம் வைக்கிறவரை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு ஆலயத்தின் மணிக்கதவுகள் திறக்க மறுப்பதேன்?

இப்படி அடுக்கடுக்கான கீழ்சாதியினரின் இதயத்தைக் கீறிக் கிழித்து குருதியை ஓடவிடும் மேல் வருணத்தாரின் போக்கை - நீலமணியின் எழுத்து சுட்டெரிக்கிறது.

தந்தை பெரியார் இக்கொடுமைகளைக் களைய வந்த கருப்புச் சூரியன்.

சுயமரியாதை உணர்வூட்டிய - பகுத்தறிவு சோதி.