பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தந்தை பெரியார்


வியாபாரிகள்; வயதான வெங்கட்டப்பரை விட சுறுசுறுப்பும், புத்தி கூர்மையும் உடைய இராமசாமியிடம் வியாபாரம் செய்யவே விரும்பினர்.

பல ஆண்டு கால அனுபவமுடைய தன்னுடைய தொழில் வெற்றியின் ரகசியத்தை, பனிரெண்டு வயதிலேயே புரிந்து கொண்டு வெற்றி மகனை எண்ணி வெங்கட்டப்பர் உள்ளம் பூரித்தார். இது தாயாருக்கும் பெருமையாயிருந்தது. ஆனால், இராமசாமியின் உள்ளத்தில் மட்டும் ஒரு குறை -

முன்பெல்லாம் பள்ளி விட்டதும், வீட்டில் நடக்கும் இராமாயணம், பாரதம் சொற்பொழிவுகளை அவரால் கேட்க முடிந்தது.

இப்பொழுது கடையை விட்டுப் போக முடியாது.

ஆனால் கடை விடுமுறை நாளில் கதை சொல்கிறவர்கள் வீடு தேடிப் போவார்.

இவர்கள் எதைச் சொல்லி, நாள் தவறாமல், இத்தனை மக்களைத் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்கள் என்று அறியவோ -

அல்லது -

இத்தனை பேரும் இந்தக் கதைக்காரர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ள வருகிறார்கள் என்று அறிந்து கொள்ளவோ -

இராமசாமியும் விடுமுறை நாளில் அவர்கள் வீடு தேடிப்போய் நடந்த ஒரு வாரக் கதையையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.