பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிறைவேற்றி அரசை மிரட்டித் தங்கள் கோரிக்கையை முற்றுவித்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் ஒரு விநோதனமான முயற்சி ஒரு குறிப்பிட்ட சாதியாருள் பல கிளைகள் இருக்குமானால் அவர்கள் மாநாடு போட்டு “நாங்கள் எல்லாம் ஒரு குடைக்கீழ் வரவேண்டும்” என்று தீர்மானம் போடுகிறார்கள். கட்சி அரசியலாதலால் அரசும் பணிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றது. வாக்கு வங்கியை நினைத்துக் கொள்கின்றது அரசு. இது ‘ஜனநாயகம்’ என்று நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். இஃது ஒருவித உரிமம்போல் (License) செயற்படுகின்றது. அறிவியல் நோக்கு மனப்பான்மையுள்ளவர்கள் தமக்குள் நகைத்துக் கொள்ளுகின்றார்கள். புராண நம்பிக்கை புள்ளவர்கள் “யுகதர்மம்” என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொள்ளுகின்றார்கள்.

(v) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?

இது பெரியாரின் கடுமையான சிந்தனை. மடங்களும் சங்கராச்சாரியார்கள் போன்றவர்களின் யோசனைகளை வைதிகர்கள் நிறைவேற்றிக் கொள்வது போலவே, பெரியார் சார்புள்ளவர்கள் அதனை நிறைவேற்றத் தொடங்குகின்றனர். முன்னவர் செயல் திட்டம் நிறைவேற்றப்பெறும்போது அமைதியாக நடைபெறுகின்றது. பின்னவர் செயல்திட்டம் நிறைவேற்றப்பெறும் போது கலகமாகிறது; சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக வடிவங் கொள்ளுகின்றது.

பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை