பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தந்தை பெரியார் சிந்தனைகள்



வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.

(vi) சமுதாயத்தில் நலம் ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல.

தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும் தன்னிச்சையாகவோ, சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச் சமுதாயத்தில் ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவித சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் பிரச்சாரத்தால்தான் செய்யவேண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்களின் சங்கங்கள் இவற்றைச் செய்து வருகின்றன. அனைத்தையும், மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காலந்தோறும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

(7) சாதிவேற்றுமையை வளர்ப்பவை: இவைபற்றியும் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்துள்ளார்கள். சில சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(i) வருணாசிரமதர்மத்தின் மூலமாக நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமுலில் இருந்து வருகின்றதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக்கொள்கை பரவ மார்க்கமே இல்லை. வருணாசிரமதர்மம் என்கிற உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

(ii) இன்றைய சாதி வேற்றுமைக்கு ஆதாரமாயுள்ள சாலை, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒருவிதமாக மாற்றப்பட்டு வந்துகொண்டிருந்தாலும், இந்தக் கோயில்கள் தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம்தராமல் சாதிவேற்றுமையை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பெற்று வருகின்றன. ஆதலால்தான் நான் தீண்டத்தகாத மக்கள் என்போர் கண்டிப்பாய்க் கோயிலுக்குள் போய்த்தீர வேண்டும் என்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவமன்னிப்புக்காவோ, அல்லவே அல்ல. கோயில் சமத்துவம் அடைந்துவிட்டால் மற்ற காரியங்களில் வேற்றுமை இருக்க முடியவே முடியாது. கோயிலில் பிரவேசித்து நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வேற்றுமையை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை.