பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தந்தை பெரியார் சிந்தனைகள்



ஒதுக்கிவைத்தனர். மதுத்துறை வரும்படி குறைந்தால் கல்விக்குச் செலவிடப் பணம் குறைந்துவிடும். ஆதலால் மக்களுக்குக் கல்வி அளிப்பதைக் குறைத்து விடலாம் என்று கருதியே இந்த மதுவிலக்குத்திட்டம் சூழ்ச்சிகரமாக நிர்மாணத்திட்டத்தில் சேர்க்கப்பெற்றது.

(vi) இந்த முட்டாள்தனமாக கொள்கையால் (மதுவிலக்குக் கொள்கையால்) அரசாங்கத்துக்குக் கிடைக்கும் சுமார் இருபது கோடி ரூபாய் இழப்பாகிறது. இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

இவை பெரியார் காலத்து அரசியல்நிலையை அனுசரித்துச் சிந்திக்கப் பெற்றவை. இன்றைய நிலையில் இவை ஏட்டுச்சுரைக்காயாகிவிட்டது.

(2) புதுமை வேட்கை: இதுபற்றியும் பெரியாரின் சிந்தனைகள்:

(i) முன்னோர்கள் செய்து வைத்தவற்றை மாற்றக்கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அநுபவசாலிகள் ஆவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் மிக்க அநுபவசாலிகளேயாவார்கள்.

(ii) முன்னோர்கள் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்! நெருப்பென்பதே என்னவென்று தெரியாதகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன்-அந்தக்காலத்துக் கடவுள்தான், அந்தக் காலத்து எடிசன் தான்; அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்தபிறகு எவனாவது சிக்கிமுக்கிக் கல்லைத் தேடிக்கொண்டு திரிவானா நெருப்பு உண்டாக்க? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் மதிக்கும்?

(iii) பழமையை யார் அலட்சியம் செய்யாமல் இருக்கிறார்கள்? பழமை என்பதற்காக எதைவிடாமல் அப்படியே கையாண்டு வருகிறார்கள்? பழமை என்பதால் இன்னும் கட்டைவண்டியில் பயணம் செய்கிறோமா? இல்லையே?

(iv) நம்மக்கள் வேட்டி, சட்டை முதலியவை கொஞ்சம் பழசானாலும் வேறு புதியவைகளை மாற்றிக்கொள்ளுகிறார்கள். உணவு, உடை, வீடு இவற்றையெல்லாம் நமது வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளுகிறோம். இப்படி மற்றவைகளின் புதுமையைக் கருதும் நாம் நமது தன்மானத்தில் பழமையை நோக்கியே சென்று கொண்டுள்ளோம்.