பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(v) ஆத்மா என்பது பொய், மதக்கற்பனைக்கு ஒரு பொய் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலைநாட்ட பலபொய் பேச வேண்டியிருப்பது போல, மதத் தத்துவம் என்ற பொய்யை நிலைநிறுத்தவோ ஆத்மா, தர்மம் என்பதாக பொய்க்களஞ்சியங்களை உற்பத்தி செய்யவேண்டியதாயிற்று.

(vi) ஆத்மாவைப்பற்றிப் பேசவேண்டுமானால் அறிவையும் அநுபவத்தையும் தூரவைத்துவிட்டு வெறும் நம்பிக்கைமீதே ஒப்புக்கொண்டு பேசவேண்டியதாக உள்ளது.

(ஆ) சோதிடம்: சோதிடம் பற்றியும் தந்தையவர்கள் சிந்தித்துச் சிந்தனைகளை வடித்துள்ளார்கள். அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் வைப்பேன்:

(i) பொதுவாக ஒரு பகுத்தறிவுவாதி சோதிடத்தின் தன்மையை ஊடுருவிப் பார்த்தால் அதனை ஒரு மதசம்பந்தமான கொள்கை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மத சம்பந்தமான கொள்கைகள் அநேகமாக மூடநம்பிக்கைகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே சோதிடமும் மூடநம்பிக்கையாகவே உள்ளது.

(ii) முட்டாள்தனமும் பித்தலாட்டமும் (அயோக்கியதனமும்) சரிபாதியாகக் கலந்ததே சோதிடம் என்பது.

(iii) மனிதன் செய்யும் காரியங்கள் எல்லாம் சாதகப்படியும், சாதகப்பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதியெல்லாம் முற்பிறவி பலன்படியும் நடப்பதாயிருந்தால் பாவம், புண்ணியம் என்ற பாகுபாடும் நற்செய்கை, துர்ச்செய்கை என்ற பெயரும் எப்படிப் பொருந்தும்?

(iv) பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் “சாதகம் பார்க்கிறேன்” என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னால், ‘இது குதிரைச் சாதகம்’ ‘இது கழுதைச் சாதகம்’ என்று கூறமாட்டானே! உடனே பொருத்தம் பார்த்துச் ‘சரியாக இருக்கிறது’ என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்திற்கு வேறுபாடு தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூறமுடியும்? என்று நம் மக்கள் கொஞ்சம்கூட சிந்திப்பதில்லையே!

(v) நாள், கிழமை, மாதம், ஆண்டு, நேரம், காலம், சோதிடம், சகுனம் முதலிய மற்றும் எத்தனையோ துர்நாற்றங்கள் மக்களைக் கவ்விக்கொண்டுள்ளன. இவற்றிலிருந்து மக்களை விலகச் சொல்ல வேண்டுமானால் பூகம்பம், வெள்ளம், புயல், விஷநோய் முதலிய