பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தந்தை பெரியார் சிந்தனைகள்



பழையபல் (பிரஷ்) மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இந்தப் பெட்டிக்குள்தான். சட்டைப்பையிலுள்ள குப்பைகள் அதாவது ‘ரிக்கார்டுகள்’ மிகுந்து விட்டால் அவற்றில் சில இப்பெட்டிக்குள் புகலிடம் பெறும். இரண்டு மூன்று மாதங்கட்கு ஒருமுறை பெட்டி மூட முடியாமலே முட்டிக்கொண்டால் இப்பெட்டி காலி செய்யப்பெறுவதுண்டு.

இம்மாதிரி உருவத்தோடும் உடையோடும் வாலிபநடையோடும் கையில் பிடித்த தடியுடனும் காணப்பெறுபவரே தந்தை பெரியார். இவருடைய பொறுமை யாவராலும் போற்றக் கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, பொறுமையை இழக்கமாட்டார். கடுஞ்சொற்களைப் பயன் படுத்தமாட்டார். இவர்பகைமை என்பதைப் பொருட்படுத்தவே மாட்டார். நீண்டகாலப் பகைவர்களோடும்கூட விரைவில் தாமாகவே வலிந்து நட்புக் கொண்டு விடுவார். இப்பெருந் தகையை,

வயதில் அறிவில் முதியோர்-நாட்டின்
வாய்மை போருக் கென்றாம் இறையாய்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை.

என்று சித்திரித்துக் காட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன். டாக்டர் பழநி. அரங்கசாமியார்,

சாதியும் மதவெறியும் சாய்ந்திருந்த கழகத்தைத்
தடிகொண்டு நிமிர்த்திட்ட தனிப்பெருந் தலைவா!
தமிழகத்தின் சுமைதன்னைத் தன்முதுகில் தாங்கிஇங்குத்
தொண்ணூற்று நான்கிலும் தொண்டுசெய்த பழுத்தபழம்
துணிச்சலும் ஆற்றலும் சுயமான சிந்தனையும்
தொலைதூர நோக்கும் அயராத உழைப்பும்
அன்புக்குப் பணிவையும், வன்புக்குத் துணிச்சலையும்
காலமெல்லாம் காட்டிவந்த கருஞ்சட்டைப் பெருந்தலைவர்!
[1]

என்று ஒரு சொல்லோவியமாகக் காட்டுவார்.

“பெரியார் உயிருடன் வாழ்ந்த மொத்த நாட்கள் 34,433 ஆகும. இந்த நாட்களில் அவர் பெரும்பாலான நேரத்தைப் பேசவும் எழுந்தவும் பயன்படுத்தினார். அவர் செய்த மொத்தப் பயணதூரம் 15,12,000 கிலோமீட்டர். இந்தத் தூரம் பூமியை 33 முறை சுற்றி வந்ததற்குச் சமமாகும். அவர் சொற்பொழிவாற்றிய மொத்தநேரம் 21,400 மணி. இந்தப்பேச்சை ஒலிப்பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 நாட்கள் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்” (மின்மினி)[2]


  1. தந்தைபெரியார் 21ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்-பக் 23.
  2. பெரியாரியல் (நன்னன் தொகுத்தது) பக்-73.