பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனாருக்கு முன் எத்தனையோ தலைமுறையினர் இவ்வாறு உழைத்த உழைப்பும் இதில் கலந்துள்ளது. அவர்களின் உழைப்பு முதல், இன்றை கவிஞர்கள், கட்டுரையாசிரியர்கள், கதையாசிரியர்கள் முதலியவர்களின் உழைப்புவரையில் அவற்றோடு எழுதக்காரணமாக இக்காலத்துத் தமிழ்பேசும் மக்களின் உழைப்பும் ஆகிய எல்லாம் இந்த ஒரு மொழியின் வளர்ச்சியில் கலந்திருக்கிறது. தமிழைப் போலவே, உலகத்து மொழிகளுள் ஒவ்வொன்றும் இவ்வாறு பல தலைமுறையினரின் உழைப்பால் வளர்ந்து விளங்கும் பெரிய அமைப்பாக உள்ளது எனலாம்.

மொழிக்கலப்பு: சமயம், வாணிகம் முதலிய காரணங்களால் பிறமொழிச்சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்துள்ளன. பெரும்பாலும் இவை பேச்சு வழக்கில்தான் அதிகமாக அடிபட்டு வந்தன. வடமொழி வெறியாளர்கள் வேண்டுமென்றே வடசொற்களைக் கலக்கத் தொடங்கினர். தொல்காப்பியர் வடசொல், திசைச்சொல் இவற்றிற்கு இலக்கணத்திலும் இடம் வைத்து அவை வழங்கப்பெறும் முறைகளையும் வகுத்துக் காட்டியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் தோன்றி அவற்றிற்கு எதிர்ப்பும் தோன்றியுள்ளது. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற கருத்துகளும் தோன்றியுள்ளன. கிளைமொழிகள் பற்றிய கருத்தும் இடம் பெற்றுள்ளது.

மேல்நாட்டு அறிஞர்களான கிட்டல் (கன்னடம்), குண்டெர்ட் (மலையாளம்), சி. பி. பிளெளன் (தெலுங்கு), கால்டுவெல்(தமிழ்) போன்ற அறிஞர்கள் மொழிகளைச் சித்தியமொழி இனம், ஆரிய மொழி இனம், திராவிட மொழியினம் என வகுத்துக் காட்டித் திராவிடமொழியினத்தில் தமிழ்தான் தலைமொழி என்ற கருத்தையும் நிலைநாட்டினர். திராவிட மொழியினத்தில் திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் இன்னவை இன்னவை என்று வகைப்படுத்தியும் மொழி ஆய்வில் புதுத்துறையையும் காட்டியுள்ளனர்.

மொழி ஆராய்ச்சி: பழங்காலத்தில் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் மேற்கொண்ட முயற்சி விநோதமானது. மனித வர்க்கம் முற்றிலும் ஒன்று சேர்ந்து தேவனை எதிர்த்தார்கள் என்றும், தேவன் அவர்கள்மீது சினங்கொண்டு “நீங்கள் பேசும் மொழிகள் பல்வேறு மொழிகளாக மாறக்கடவதென்றும், ஒரு பகுதியினர் பேசும் மொழி ஏனைய பகுதியினருக்கு விளங்கக் கூடாதென்றும் சாபம் இட்டார் எனவும்” நம்பினர், இச்சாபமே பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தது என்று நம்பினர். எனவே