பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தந்தை பெரியார் சிந்தனைகள்



(x) அரசன் வேண்டா, குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு, சமதர்மம் வேண்டும், சானாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு, ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல், பொருளாதார முன்னேற்ற அறிவுக்கருத்துகளையும் ஆங்கிலமொழிதான் நமக்குத் தந்தது. வடமொழித் தொடர்பு சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக் கைகள் நம்பகுத்தறிவை அடிமைப்படுத்தின. ஆங்கிலமொழி நம்மை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்து எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. இந்த இடத்தில் அக்காலத்தில் நம்நிலை பற்றி ‘மெக்காலே’ என்ற அறிஞர் ஆயத்தம் செய்த Minutes என்ற அறிக்கையை மீளநோக்கினால் புத்தொளிவீசும்.[குறிப்பு 1]

இந்த இடத்தில் அரசு தனது முரண்பட்ட கொள்கைகளைச் சிந்தித்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள்.

(அ) சாதிப்பெயர்கள்: (i) சாதிப்பெயர்கள் உள்ள தெருப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியது.

விளைவு: (i) காஞ்சியில் உள்ள ‘அய்யர் தெரு’ என்பதிலுள்ள ‘அய்யர்’ என்பதை நீக்கினால் என்ன ஆகும்?

(ii) புதுச்சேரியில் உள்ள ‘செட்டித்தெரு’ என்பதிலுள்ள ‘செட்டி’ என்ற பெயரை நீக்கினால் என்ன ஆகும்?

(iii) பேருந்துப்பெயர்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்கக் கொண்டுவந்த திட்டத்தால் ‘திருவள்ளுவர்’ பெயரும் அடிபட்டுப் போயிற்று. இது மிகவும் வருந்த வேண்டியதொன்று. அரசு மீண்டும் ‘திருவள்ளுவர்’ பெயரைக் கொண்டு வரவேண்டும். ஏதாவது ஒரு குறள் வாசகத்தை எல்லாப் பேருந்துகளிலும் எழுதும்படிச் செய்தல் வேண்டும்.

(ஆ) மொழிவழிக் கல்வி: (i) தமிழ்வழியிலும், ஆங்கில வழியிலும் பயிலலாம் என்ற விருப்பமுறையைப் பயன்படுத்தலாம்.

(ii) சட்டத்தால் தமிழை வளர்க்க முடியாது. சங்கத்தால்தான் வளர்க்க முடியும்.

(iii) பண்டை அரசர்கள் சங்கத்தில் கவிபாடினார்களேயன்றி அரசவையில் அல்ல.


  1. இன்று வெளிநாட்டுக்குக் கல்வி கற்கச் சென்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்களே என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.