பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தந்தை பெரியார் சிந்தனைகள்



இருப்பதில்லை. புத்தம்புதிய நூல்களைப் படைக்கவேண்டும் என்ற ‘உந்தும் ஆற்றல்’ அவர்களிடம் நான் காண்பதில்லை. அவர்கள் பணியாற்றும் முறையும் அறிஞர் மனத்திற்கு உகந்ததாக இல்லை.


8. இலக்கியம்


‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர்.

 
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்
வார்த்தைபதி னாயிரத் தொருவர்
[குறிப்பு 1]

என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ அதுதான் இலக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் இலக்கியத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவர்கள் இலக்கியம் பகுத்தறிவுக் கொத்ததாக இருத்தல் வேண்டும் என்று விழைகின்றார். இன்று நிலைபெற்றுள்ள இலக்கியங்கள் அனைத்தையும் கடிகின்றார். இலக்கியம்பற்றி அவருடைய சிந்தனைகளைக் காண்போம்.

(1) மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவாக இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறக்கமுடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடையமுடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவராவார்கள்.

(2) தமிழர்களுக்கு மொழி சம்பந்தமான இலக்கியம் தொல் காப்பியத்தைத் தவிர, வேறு ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. வேறு ஒன்றும் ஆதியில் இருந்ததாகக் காணப்படவில்லை. தமிழர்களுக்கு இன்று காணப்படும் இலக்கியங்களும் ஆரியச் சார்பு உடையனவாக உள்ளனவே தவிர சுத்தத்தமிழாகக் காணக்கிடைப்பதில்லை.


  1. ஒளவையார்-தனிப்பாடல் திரட்டு-பகுதி-1 பக். 119.