பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(3) இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்டவேண்டும். மக்களிடம் உயர்குணங்களைப் புகுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் ஆண்களுக்குப் பெண்களை அடிமை படுத்தவேண்டும் என்பதற்கே இலக்கியங்கள் இயற்றப்பெற்றுள்ளன. இதனால்தான் பெண்கள் சமுதாயம் தலையெடுக்கவே முடியாது போய்விட்டது.

(4) இனிமேல்தான் நமக்காக இலக்கியம் தோன்றவேண்டும். அதில் இந்துமதம், ஆத்திகம், ஆரியம் ஆகிய மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதாம் இருக்க வேண்டும். அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம், ஆராய்ச்சி என்றால் அவை நம்நாட்டில் நாத்திகம், மதவெறுப்பு என்றாக்கப் பட்டு விட்டது. அதனாலேயே நம் நாட்டில் பயன்படும் இலக்கியம் இல்லை என்பதோடு தோன்றவும் இல்லை.[குறிப்பு 1]

(5) இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்! எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லாம்? அது எதற்காக இருக்கவேண்டும்? என்பவைபற்றிச் சிந்தித்தால் உலகில் எல்லாம் எல்லாத்துறைகளும் மனிதனின் உயர்வாழ்க்கைக்கு மட்டிலும் அல்ல; மனிதர் சமுதாய வளர்ச்சிக்குக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.

(6) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணாக்கர்கட்குத் தமிழ் இலக்கியத்திற்கு நூல்கள் எவை? கம்பராமாயணம், வில்லி பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திவ்வியபிரபந்தம் போன்ற மதத் தத்துவங்களையும், ஆரியமதத்தத்துவம் என்னும் ஒருதனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் காணப்பெறுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராணஞானத்தானே அதிகமாக இருக்கின்றது?

(7) கம்பராமாயணம் அரிய இலக்கியம் என்று சொல்லுகிறார்களே. இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுநாள் பட்டினி கிடந்தாலும் மலத்திலிருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோலத்தானே கம்பராமாயண இலக்கியம் உள்ளது? அதில் தமிழ்மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படிக் கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால்


  1. இத்தகைய இலக்கியம் தோன்றினால் அஃது உணர்வுக்கு இடம் இல்லாத இலக்கியமாகவே இருக்கும்.