பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தந்தை பெரியார் சிந்தனைகள்


மகிழ்ந்தார். இனி தலைப்புக்கு வருகிறேன். சமயங்கள் கடவுளைப் பற்றிக் கூறும் கருத்துகளைக் காண்போம். அப்போதுதான் அய்யா அவர்களின் கருத்துகள் தெளிவாகும்.


1. கடவுள் - பொது

ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை.

(1) சைவம்: சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். கடவுள் எத்தகையவர் என்று இயம்புவதன் மூலம் இவ்வுலக நடைமுறையே விளக்கப் பெறுகின்றது. குடும்பிகளுள் சிவபெருமான் ஒரு சிறந்த குடும்பி. உலகெலாம் அவர் குடும்பம். அது தன் முறை பிறழாது நடைபெறுகின்றது. அதன் முறை பிறழாத நடப்பே அவரது ஆட்சி. சிதறடையும் உலகம் அவர் ஆட்சிக்குட்பட்டு ஒன்று சேர்ந்துள்ளது. முரண்பாடுகளெல்லாம் அவரது ஆணையால் ஒழுங்குபாடு பெறுகின்றன. அவரது குடும்பத்தை ஓர் எல்லையில் அடக்கி வைத்துப் பார்த்தால் இவ்வுண்மைகள் விளங்கும். இங்கு நாம் அனைத்தையும் உருவகங்களாகக் காண்கின்றோம்.

திருக்கயிலாயம் சிவனது உலகம். அங்கு தம் தேவி பார்வதியுடன் வீற்றிருக்கின்றார். பரிவாரங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்துள்ளன. மனை வாழ்க்கையின் பொறுப்பு, பேறு, பண்பு அனைத்தும் ஆங்கு ஒன்று சேர்ந்து மிளிர்கின்றன. பேறுகளில் தலையாயது மக்கட்பேறு. ஒருவருக்கு மகன் என்று ஒரு பதுமை பிறந்து விட்டால் போதாது. அது அறிவறிந்த மகனாக அமைதல் வேண்டும். சிவபெருமானின் முதல் மகன் கணபதி. ஞானக்களஞ்சியமாகத் திகழ்கின்றான். இனி, இவனுக்கு உருவம் போதாது. அது வெறும் சப்பாணி; செயலுக்கு உதவாது. மூத்தவனுக்கு அநுசரணையாக ஆற்றலும் துடுக்கும் வடிவெடுத்தவனாகின்றான் இளையவன் கார்த்திக்கேயன். அறிவும் ஆற்றலும் எவனிடத்து ஒன்று சேர்ந்து ஒளிர்விடுகின்றனவோ அவனே பண்புடைய மகனாகின்றான். இவ்விரண்டு மேன்மைகளைத் தனித்தனியே விளக்குவதற்கு அவை இரு பிள்ளைகளாக உருவகப்படுத்தி விரிவாக விளக்கப்பெறுகின்றன. அறிவும் ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன், சிவனை அறியவல்லவனாகின்றான். அவனே உண்மையில் சிவகுமாரனாகின்றான்.