பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சக்தி' என வழங்குவர்.[குறிப்பு 1] இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்புகளில் செலுத்தி நிற்றலால் 'திரோதான சக்தி' (திரோதானம்-மறைப்பது) என்ற திருப்பெயரையும் பெறுகின்றனது. இந்தச் சக்தியையே பாரதியார்,

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை;
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரள்எனச் செல்லுவை;
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை;
சூழும் வெள்ள மெனஉயிர் மாற்றுவை;
விரியும் நீள்கடல் என்ன நிறைந்தனை;
வெல்க காளி யெனதம்மை வெல்கவே.[1]

என்ற பாடலை அடுத்து வரும் பாடல்களெல்லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம்.

மேற்கூறியவற்றால் சொரூப நிலையில் இறைவனை தனக்கென்று ஓர் உருவும், தொழிலும், பெயரும் இல்லாதவனாயினும், தடத்த நிலையில் ஆருயிர்களின் பொருட்டுப் பலப்பல உருவமும் தொழிலும் பெயரும் உடையவனாகின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனை அநுபூதி நிலையில் தெளிந்த மணிவாசகப் பெருமான்,

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க் காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ?[2]

என்று அருளிச் செய்துள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்தநிலையேயன்றி கற்பனையாகாமையை அறிந்து தெளியலாம்.

(ஈ) இறைவனின் திருமேனி பற்றி: இறைவனின் திருமேனிப் பற்றி மேலும் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். இறைவனுடைய உருவத்திருமேனி 'போகவடிவம், யோகவடிவம், வேகவடிவம்' என்று மூவகைப்படும். போகவடிவம் உலக இன்பத்தைத் தருதற்பொருட்டு மணக்கோலம் கொள்ளுதல் போன்றவை. யோக வடிவம் ஞானத்தைத் தருதற்பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை. வேகவடிவம் உலகத்தார்க்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கப் போர்க்கோலம் கொள்ளுதல் போன்றவையாகும்.


  1. மேல் மருவத்திதூர் ‘ஆதிபராசக்தி’ திருக்கோயில் இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பெற்றதாகக் கருதலாம்.
  1. மேலது.-மகாசக்தி வாழ்த்து-3
  2. திருவா-தெள்ளேணம்-1