பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடியும்? அப்படி ஒரு கடவுள் உள்ளது என்று சொல்லப் பெறுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதால் என்ன நட்டம்? என்று கேட்கின்றார் அய்யா.

(3) கடவுளைப் பற்றிய எண்ணமேகூடாது என்பது அய்யாவின் கருத்தன்று. மனிதச் சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப் பட்ட கடவுள் இருக்கக்கூடாது என்று தான் அய்யா அவர்கள் வற்புறுத்திப்பேசுகின்றார்கள்.

(4) புலிக்கு ஆடுகளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப் பெற்ற அடிமை என்பதாகக் கருதி நடத்தப் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே கடவுள் இப்படி ஒரு நீதி எற்படுத்தி இருப்பாரானால் முதலில் அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

(5) கோயிலுக்குப் போய்ச் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப் பட்டுச் செத்துவிடும் என்கிறானே பார்ப்பான் ! ‘வெளியிலிருந்து கன்னத்தில போட்டுக்கொள்’ என்கிறானே! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால் கீழச்சாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா? -என்கிறார் பெரியார்.

(6) "நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 விழுக்காடு பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும் அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு அந்தக் கதைகள் காட்டு மிராண்டிக் கதைகள் என்பது விளக்கப்படவேயாகும்.

(7) கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாகவே முடியாது. பணக்காரனாக பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியாது. எங்கெங்குப் பகவான்- கடவுள்- ஒழிகின்றானோ அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான்; அறிவியலறிஞன் தோன்றுவான்.

(8) தமிழனை முட்டாளாக ஆக்குவது கடவுள். அதை ஒழிப்பது தான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான். எங்கள் வேலை-என்கின்றார்கள்.