பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை
(பேராசிரியர் டாக்டர் இரா. தாண்டவன் அவர்கள்)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது குறிஞ்சி மலர். பன்னூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னூறு ஆயிரம் பேர்களில் ஒருவர் தலைவர் ஆகிறார். தமிழர்க்கு காலம் தவமிருந்து பெற்றளித்த தலைவர் தந்தை பெரியார், ஈ.வெ.ரா. அவர்கள்.

நூற்றுக்கணக்கான மலைகள் ஆயினும் நோக்கமுடியாத உயரம் இமயம்! அலைகள் ஆயிரக்கணக்கானவைகள் எனினும் அளக்கமுடியாத ஆழம் கடல்! இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய தலைவர்கள் எண்ணற்றோர்! மக்களின் மனதில் நிற்பவர்களோ மிகச் சிலரே. மிகச் சிலரில் முதன்மை இடம் வகிப்பவர் தந்தை பெரியார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பிய பெருமை சித்தர்களைச் சாரும். “கோயிலாவதேதடா! குளங்களாவதேதடா!” “நட்ட கல்லும் பேசுமோ - நாதன் உள்ளிருக்கையில்” என்று பல நிலைகளில் எடுத்தியம்பினர். ஆனால் சித்தர்களின் சித்தாந்தங்களினால் பாமரமக்களின் மத்தியில் பயன் பெரிய அளவில் விளையவில்லை என்றே கூறலாம். சித்தர்களுக்குப் பிறகு பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பத் தமிழில் எளிய வழிகளில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்பேசி மக்களைத் தட்டியெழுப்பிய பெரும்ை தந்தை பெரியாரையே சாரும்.

சென்னை பல்கலைக் கழக அண்ணா பொதுவாழ்வியல் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேராசிரியர் சி.அ. பெருமாள் அவர்களின் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக (2001) பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்களை அணுகியபோது அவர் “வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ராவைப் பற்றிப் பேச முன்வந்தார். தள்ளாத வயதிலும் தமிழ்ப்

_______________________________________
பேராசிரியர்-துறைத் தலைவர், அண்ணா பொதுவாழ்வியல் மையம்,
சென்னைப் பல்கலைக் கழகம்,
சென்னை - 600 005
VII