பக்கம்:தன்னுணர்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

போல் உள்ள போலியர் நாம் கூறுவதை அறிவதும், அறிந்து, அதன்படி நடப்பதும் கடினமே. உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதே போல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதனை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன் பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்

உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எக்கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும், எனக்குத் தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக்கூடாது. ஒரு கூட்டத்தோடு ஒட்டிய கருத்து எல்லார் வழியும் தொடருமானால் அக் கருத்தில் உள்ள பிழையின் தொடக்கம் எஃது என்று நமக்குப் புலப்படாது போய்விடும்

பொது மக்களின் ஒன்று திரண்ட கருத்துக்கு நீ இலக்கானால் உனக்கென்று எவ்வகைப் பெருமையும் இல்லை. பொது மக்களின் கடுப்புக்கும், மலர்ச்சிக்கும் ஆழமான பொருட்டுகள் இருப்பதில்லை. காற்று எப்புடை வீசுகின்றதோ, செய்தித் தாள்கள் எந்தக் குரலில் பேசுகின்றனவோ, அதைப் பொறுத்திருக்கின்றன, பொது மக்களின் விருப்பும் வெறுப்பும், கற்றவர்களுக்குத் தங்கள் அறியாமை தெரிந்திருக்குமாகையால், அவர்கள் என்றும் பொது மக்களின் மனக்கிளர்ச்சிகளைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/17&oldid=1162185" இலிருந்து மீள்விக்கப்பட்டது