பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



118
தமிழகக் குறுநிலவேந்தர்


கொள்க. இக்கருத்தானன்றே "ஆரங் கண்ணிச் சோழன்" எனவும், "முல்லைத்தார்ச் செம்பியன்" எனவும் சான்றோர் வேறுவேறு கூறினார்ரெனவுணர்க. திரு முருகாற்றுப்படை யுரையினும் நச்சினார்க்கினியர் முருகக் கடவுட்குக் கடம்பினைத் தார்ப்பூவாகவும், காந்தளை அடையாளப்பூவாகவும் கூறினார்.

ஆண்டுங் கண்ணியையும் தாரினையும் வேறுபடுத்து "மாராஅத்துருள் பூந்தண்டார்” எனவும், "காந்தட் பெருந்தண் கண்ணி" எனவும் வழங்குதல் ஆராய்ந்துகொள்க. அன்றியும் இம்முல்லைத்தார் அரசமுல்லை முதலாக, மற முல்லையிறுதியாகக் கூறப்பட்ட துறைவகைகளாற் பெரும் பாலும் அரசியல்பின் மிகுதியும் வீரரதியல்பின் மிகுதியுமே கூறுதலால், அவற்றிற்கு அறிகுறியாய் வீரமாலையாய்ச் சிறத்தலுங் கண்டு கொள்க.

இக்கருத்தானே முல்லைத்தார்ச் செம்பியன் என்பதற்கு வெற்றிமாலையையுடைய சோழன் என்றார் சாமுண்டி தேவநாயகரும் "முல்லைத்தார் வேந்தன் றொடுகழன் மைந்தர் தொழில்" என்றார் வஞ்சிப்படலத்தும் (வெண்பா மாலை). இம்மறவர் தஞ்சோழனது தார்ப்பூவாதலாலும், தமக்கு வீரமாலையாய்ச் சிறத்தலாலும், முல்லை மாலையைப் புனைவாராயினர் எனக்கோடலே இயைபுடைத்தாகும். ஒருதுறைக்கோவையில் அமிர்தகவிராயரும் "முல்லைவீரத் தொடை புனைவோன் ரகுநாதன்" (6) எனக்கூறுதலுங் காண்க. இத்துணையுங் கூறியவாற்றால் இச்சேதுபதிகள் சோழன்மறவர்வழித் தோன்றியோரே யாவர் என்பது நன்குணரலாகும்.

இனி, இச்செம்பிநாட்டு மறவருக்குள் ஒர் கிளையினர் "பிச்சகிளை" என்னும் பெயரான் வழங்கப்படுகின்றனர். இக்கிளையினராகிய மறவர் தம்முடைய வீரத்தால் முடி யுடைப்பெருவேந்தர்பாற் கொற்றக்குடை முதலிய விருது பெற்றுச் சிறந்தார்வழித் தோன்றினராவர். பிச்சம்-குடை.