பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

(7933'), குல்குடி சிகரம் (8,002'), நீலகிரி சிகரம் (8,118'), மூகறுத்தி சிகரம் (8,380'), தேர்பெட்டா சிகரம் (8,304'), கொலிபெட்டா சிகரம் (8,182') என்பவை குறிப்பிடத்தக்கவை.

அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் :

நீலகிரியின் மீதுள்ள பீடபூமி உயர்வும் தாழ்வுமான குன்றுகளையுடையது என்று படித்தோம். இரண்டு குன்றுகளுக்கு நடுவிலுள்ள ஒவ்வோர் இடை வெளியிலும் ஓர் அருவி ஓடிக்கொண்டிருக்கும். இவ்வாறு ஓடும் அருவிகள் பல ஒன்று சேர்ந்து பேரருவியாக மாறும். அப்பேரருவி வடக்கிலுள்ள மோயாற்றிலாவது, தெற்கிலுள்ள பவானியாற்றிலாவது விழும். நீலகிரியின் வடபகுதியில் தோன்றும் சீகூர் ஆறானது சீகூர் மலைகளின் பக்கமாக ஓடி மோயாற்றில் விழுகிறது. இவ்வாறு உதகமண்டல ஏரிக்கு மேற்புறத்திலுள்ள சரிவில் தோன்றி, ஏரியில் குளித்துக் கிளம்பி, 'சண்டி நுல்லா' அருவியோடு சேர்கிறது. அவ்வாறு சேர்ந்த தும் 170 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து 'காலகட்டி' நீர் வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இந் நீர்வீழ்ச்சி சீகூர் மலைமேல் அமைந்துள்ள காலகட்டி தங்கல்மனை (Travellers' bangalow) யின் எதிரே உள்ளது.

நீலகிரியின் வடகிழக்கிலிருந்து தோன்றி ஓடிவரும் முதுகாடு அருவி, ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்விடம் இயற்கை வனப்பில் ஈடும் எடுப்பும் அற்றது. இவ்விடத்தில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய விளைவதால் இப் பெயர் பெற்றது போலும். இப் பள்ளத்தாக்கிற்குள் முதல் முதல் நுழைந்த ஓர் ஆங்கிலக் காட்டிலாகா அதிகாரி, அதன் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். "ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு! அழகான பெயர்! இப் பெயரிலேயே ஒருவிதச் சுவை தோன்றுகின்றது.