பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

போக்கிக்கொள்வதற்கும், துயரங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்கூட, இவர்கள் பலியிடும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். தேனும், பழங்களும் மலைச் சரிவில் பெருகவேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் பாலோலும் அவன் துணைவனும் நெருப்பு மூட்டி வேள்வி செய்வது வழக்கம். அரசியலாரின் தலையீட்டால், பலியிடும் பழக்கம் குறைந்து வருகின்றது.

பில்லி சூனியம் :

பில்லி சூனியம் எல்லாத் தோடர்களுக்கும் ஓரளவு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு நன்றாகத் தெரியும். மேன்மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. இக்கலை பரம்பரையாகப் பயிலப்பட்டு வருகிறது. பிற இனத்தார் இதனால் தான் தோடர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவ்வச்சத்தினாலேயே ஆண்டுதோறும் நன்கொடையாக இவர்களுக்குத் தானியம் வழங்குகின்றனர். மனித மயிரில் ஐந்து கல்லைக்கட்டி, மந்திர உச்சாடனம் செய்து, அவற்றைத் துணியில் கட்டி, எதிரியின் வீட்டுக் கூரையில் செருகி விடுவது வழக்கம். அல்லது அவன் வாழும் மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவில் புதைத்து விடுவது வழக்கம்.

குழந்தைக் கொலை :

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் அருகிக் கொண்டு வருவதற்குப் பெண் குழந்தைக்கொலை முக்கியக்காரணம் ஆகும் என்று முன்பே குறிப்பிட்டேன். பெண் குழந்தைகளின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பிற்குரிய உண்மையான காரணம் விளங்கவில்லை. பெண்குழந்தை பிறந்ததும், எருமைத் தொழுவத்தின் வாயிலில் அதைக் கிடத்திவிடுவார்கள். மலர்ந்து மணம் வீசவேண்டிய அவ்விளமொக்கு,