பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

ஓடும். அப்பொழுது பலபேர் சேர்ந்து அவற்றைத் துரத்திப் பிடிப்பார்கள். அம்முயற்சியில் பல பேருக்குக் கடுமையான காயம் ஏற்படுவதுண்டு. கடைசியாக இரண்டு எருமைகளைப் பிடித்துப் பிணத்திற்கருகில் கொண்டுவருவார்கள். அவற்றின் கொம்புகளில் நெய்யைப் பூசுவார்கள். பிறகு கோடரியின் பின்புறத்தால் தலையில் தாக்கி, எருமைகளைக் கொல்லுவார்கள். இறந்தவர் ஆணாக இருந்தால், பலியிடப்பட்ட எருமைகளைப் பிணத்தின் தலையருகில், வலதுகைப் புறமாகக் கிடத்துவர். பெண்ணாக இருந்தால், பிணத்தின் கால்களை எருமைகளின் தலைமீது தூக்கி வைப்பர். அங்கிருக்கும் ஆடவர்களெல்லாரும் இறந்துகிடக்கும் எருமைகளின் கொம்புகளைத் தொட்டு, அவைகட்கு வணக்கம் செலுத்துவர். பிறகு பிணம் பாடையிலேற்றப்பட்டு இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். பிணத்தோடு உணவு, ஆடை, அணி, பணம், புகையிலை முதலியனவும் அடுத்த உலகில் பயன்படுத்துவதற்காக வைத்தனுப்பப்படுகின்றன. அதன் பிறகு பிணத்தைச் சிதையில் வைத்துத் தீயிடுவார்கள். விலையுயர்ந்த பொருள்களையும், பிணத்தின் தலையிலிருந்து சிறிது மயிரையும் எடுத்துக்கொள்வார்கள், பிணம் எரிக்கப்பட்ட பிறகு, சிதறிய அதன் மண்டையோட்டின் ஒரு பகுதியையும் எடுத்துக்கொள்வார்கள். இத்துடன் பச்சை இறுதிச் சடங்கு முடிவுறுகிறது.

மேற்கூறிய மூட்டையை ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். முதலில் எவ்வாறு பெண்கள் அழுதார்களோ, அதே போல் இன்றும் அழுவார்கள். எருமைக் கன்றுகள் பலியிடப்படும். பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அக் குடிசையைச் சுற்றி ஒருவன் ஆடி வருவான். கடைசியாக எல்லாரும் உணவு உண்டு, தத்தம் வீடுகளுக்குப் பிரிந்து செல்வர். இதற்குக் காய்ந்த இறுதிச் சடங்கு என்று பெயர்.