பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

டிருக்கிறார்கள். ஜேனு என்றால் கன்னடத்தில் தேன் என்று பொருள். ஆகையினால் இக்குறும்பர்கள் தங்களைத் “தேனெடுக்கும் காட்டுத் தலைவர்கள்" (ஜேனு கொய்யோ ஷோலா நாயகா) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அக வாழ்க்கை :

குறும்பர் குலத்தில் ஒரு பெண் பருவமடைந்ததும், அப்பெண்ணின் மூத்த சகோதரன் புதிதாக ஒரு குடிசையை அமைப்பது வழக்கம். அதில் அப்பெண்ணைக் கொண்டுபோய் வைப்பார்கள். உறவினர்கள் நாள் தோறும் குடிசைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்ப்பார்கள். பருவமடைந்த பத்தாம் நாள் அப்பெண்ணைக் குளிப்பாட்டி வீட்டிற் கழைப்பார்கள். அத்தை மகளே பெரும்பாலும் மணத்திற்குரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். திருமணம் பெற்றோரின் இசைவுடனேயே நடைபெறும். மணமகளின் தாயார் பெண்ணுக்குத் தாலியும், மணமகனுக்குப் புத்தாடையும் அளிப்பாள். மணமகனின் பெற்றோர் பெண்ணுக்குக் கூறைப்புடவையும், பித்தளையினால் செய்த மோதிரங்களும் வளையல்களும் அளிப்பர். மணப் பெண்ணின் தாய் தாலியைக் கையிலெடுத்து மகளின் கழுத்தில் கட்டுவாள். பிறகு எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்பர். விருந்தின்போது மணமக்களுக்கு ஒரே உண்கலத்தில் உணவு பரிமாறப்படும். உணவின் ஒரு பகுதியை மணமகன் மணப் பெண்ணுக்கும் மணப்பெண் மணமகனுக்கும் ஊட்ட வேண்டும். விருந்து முடிந்ததும் மணமக்களைத் தனியறையில் விட்டுவிட்டு எல்லாரும் பிரிந்து செல்வர்.

மணவிலக்கு குறும்பர்களிடையே அனுமதிக்கப்படுகிறது. ஆணுக்கே மணவிலக்குக் கோர உரிமையுண்டு; பெண்ணுக்குக் கிடையாது. மறுமணமும், கைம்பெண் மணமும் இவர்களிடையே நடைபெறுகின்றன. இம் மணங்களில் பெண்வீட்டாரே