பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

யினருகில், உயரமான இடத்தில் சில மாறுதல்களைப் பெற்று இன்றும் கல்மனை கண்ணைக்கவரும் தோற்றத்தோடு விளங்குகிறது.

கி. பி. 1824 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்கள் பெரும் அளவில் நீலகிரி மலை மீது குடியேறத் தொடங்கினர். கோடைக்காலங்களில், சென்னை மாநில ஆளுநரும் (governor) இங்கு வந்து தங்கத் தொடங்கினார். ஆளுநர் ஆண்டுதோறும் வந்து தங்குவதற்கென்று அரசியலார் ஓரழகிய மாளிகை எழுப்பினர். அம்மாளிகை முதலில் ' 'அரசியல் மனை' (Government House) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்பொழுது அதை 'நார்வுட் மனை' (Norwood House) என்று எல்லாரும் அழைக்கின்றனர். பக்கிங்காம் பிரபு (Duke of Buckingham) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, அரசியல் மனையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அம்மாளிகையைச் சுற்றி அழகான தோட்டத்தையும் அமைத்தார். மாளிகையிலும் தோட்டத்திலும் பனிபுரிவோரின் அலுவல்களை அடிக்கடி கண்காணித்தார். இவருடைய இடையறாத தலையீட்டை அப்பணியாளர்கள் பெரிய தொல்லையாகக் கூடக் கருதினர். ஓய்வு நாட்களில் எளிய உடையணிந்து சுற்றி வருவார் பிரபு. ஒருநாள் காலையில், முகச் சவரம் கூடச் செய்து கொள்ளாமல், அலங்கோலமான தோற்றத்தோடு தோட்டத்தைச் சுற்றி வந்தார். ஓர் ஐரோப்பிய வேலைக்காரன் பாத்தி அமைத்துக்கொண்டிருந்தான். பிரபு அவனருகில் சென்று, "ஏனப்பா, இப்பாத்தியை இப்படி அமைத்தால் நன்றாயிருக்கு மல்லவா? இச் செடிகளை ஏன் இப்படி நடக் கூடாது?" என்று வினவினார். அவ் வேலைக்காரன் பிரபுவை அத்தகைய தோற்றத்தில் இதற்கு முன் பார்த்தது கிடையாது. வேறு, யாரோ வழிப்போக்கர் என்று எண்ணினான்.