பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

போர்வை தேட வேண்டும்? ஏசு நாதரின் காலடியிலேயே நாங்கள் எட்டு நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறோம்,“ என்று கூறினார்களாம். எட்டு நாட்கள் இரவு பகல் எந்நேரமும் அப்பந்தலின் அடியிலேயே இறைவனை வணங்கிய வண்ணம் அக்குடும்பத்தார் காத்துக்கிடந்தனராம். எவ்விதத் துன்பமுமின்றி எட்டு நாட்களையும் கழித்துவிட்டு ஊர் திரும்பினராம். இக்குடும்பத்தார் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்து இந்துக்கள் பழனியாண்டவனுக்கும், திருப்பதி வேங்கடப்பனுக்கும் ' வேண்டுதலை' மேற்கொள்வதுபோல், கிருத்தவர்கள் கண்டல் சிலுவைக்கு வேண்டுதலை மேற்கொள்ளு கின்றனர். பெரும் பெரும் செல்வர்களும், உயர் நிலையிலுள்ள சீமான்களும், படித்தவர்களும் இச்சிலுவையின் மகிமையைத் தம் வாழ்வில் அனுபவித்து அறிந்ததாகப் பத்திரிகையில் அடிக்கடி எழுதிக்கொண்டிருக்கின்றனர், இச்சிலுவையின் சிறப்புக்குச் சான்றாகப் புதுப்புதுக் கதைகள் தோன்றியவண்ணமிருக்கின்றன.

நாள் தோறும் இச்சிலுவையைக் கண்டு வணங்கப் பிரயாணிகள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வெள்ளிக்கிழமையன்று நோய்வாய்ப்பட்டோரும், மன்னிப்புப் பெற விரும்பும் பாவிகளும், வரம் பெற விரும்பும் பக்த கோடிகளும், கவலையால் கருத்திழந்து அமைதிகாண விரும்புவோரும் இங்குத் திரளாகக் கூடுகின்றனர். விழா நாட்களில் கண்டல் சிலுவையைத் தரிசிக்க வரும் பிரயாணிகளுக் கென்று, தனிப்பட்ட புகைவண்டிகளும், உந்துவண்டிகளும் விடப்படுகின்றன. நோய்வாய்ப்பட்டோரை, 'டோலிகளில் வைத்துத் தூக்கிக் கொண்டுவருகின்றனர். கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடியற்காலை மூன்று மணிக்கே எல்லாரும் வந்து கூடுகின்றனர்.