பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தொடங்குகிறது. அடர்ந்த காடுகளையுடைய அம் மலைத்தொடர், ஆராயும் இயல்பூக்கமுடையோர்க்கு நல்வாய்ப்பை நல்கும். கூனூரில் பல சிறந்த பள்ளிகள் உள்ளன. புனித சூசையப்பர் பள்ளி (St. Joseph's School) மிகவும் தொன்மையானது.

கோதகிரி :

உதகமண்டலத்திலிருந்து 18-ஆவது கல்லில் கோதகிரி என்ற ஊர் அமைந்துள்ளது. நீலகிரி மடந்தையின் காதில் ஒளிரும் ஆணிமுத்து என்று இதைக் கூறலாம். உதகையிலிருந்து தொட்டபெட்டாவிற்குச் செல்லும் வழியில் நான்கு கல் சென்று இடது புறமாகச் செல்லும் உலோகப் பாதை (Metal Road) யில் சென்றால், கோதகிரியை அடையலாம். இவ் வழியின் ஒரு புறத்தில் அழகிய பள்ளத்தாக்கையும், சிற்றூர்களையும் காணலாம். தும்மனடி, மடித்தொறை, குண்டமுக்கை முதலிய ஊர்களைக் கடந்து செல்லும் போது நாட்டுப்புற வாழ்வின் சிறப்பு நம் உள்ளத்தில் தென்படும். இவ்வூர்களைக் கடந்ததும் வழி நெடுகத் தோன்றும் நீரருவிகளும், இளமரக் காடுகளும், பசும் புல் வெளிகளும் நம்மை மீளா இன்பத்திலாழ்த்தும். குறுகி வளைந்து செல்லும் பாதைகளும், அவற்றில் அமைந்துள்ள வளைவுகளில் பெருமூச்சு விட்டுக் கொண்டு திணறி ஏறும் உந்து வண்டிகளும், கோதர்களின் நாட்டுப்புற வாழ்வும், நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் நிலைத்து, நினைக்குந்தோறும் இனிக்கும். 15 கல் கடந்ததும் கட்டபுட்டை என்ற சிற்றூர் உள்ளது. அவ்விடத்திலிருந்து மீண்டும் தார் போடப்பட்ட பாதை தொடங்குகிறது. அழகிய காட்சிகளிடையே மேலும் மூன்று கல் சென்றோமானால், கோதகிரியை அடையலாம். கோதகிரியின் கடைவீதி ஒரு சரிவில் அமைந்துள்ளது. அவ் வீதியிலேயே ஊராண்மைக் கழக அலுவலகமும், வேறு சில அழகிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.