பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அண்மையிலேயே, இந் நகரை அமைத்தனர். காரணம் போக்கு வரவு வசதியே.

பழனி மலையை முதன் முதலில் பார்வையிட்ட ஐரோப்பியர் லெஃப்டினண்ட் பி. எஸ். வார்டு என்பவர். இவர் கி. பி. 1821-ஆம் ஆண்டு இம் மலையை அளப்பதற்காக இங்கு வந்தார். பெரிய குளத்திலிருந்து செல்லும் பாதையில் புறப்பட்டு, வெள்ளக்கவி என்னும் சிற்றூர் வழியாக மலையுச்சியை அடைந்து அவ்வாண்டு மே திங்கள் 25-ஆம் நாள் பாம்பாறு வீழ்ச்சிக்குச் சற்று மேலே தங்கியிருந்தார் என அவர் குறிப்பால் அறியப்படுகிறது. அக் குறிப்பில் பழனி மலையை ‘வராககிரி' என்றும் திருவாங்கூர் மலைகளைக் 'கண்ணன் தேவன் மலைகள்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

- கி. பி. 1834-ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த ஜெ. சி. ராட்டன் என்பாரும், தென்மண்டல நடுவராக (Judge of the Provincial court, Southern Division) இருந்த சி, ஆர். காட்டன் என்பாரும் பெரிய குளத்திலிருந்து புறப்பட்டுச் செண்பகனூரை வந்தடைந்தனர். அவர்கள் வரவால் சீர் கேடுற்றிருந்த அக்குதிரைப் பாதை சீர்திருத்தம் பெற்றது. கி. பி. 1836-ஆம் ஆண்டு திருவாளர் வைட் என்பவர் தேவதானப் பட்டியிலிருந்து அடுக்கம் சிகரத்திற்கு அண்மையிலுள்ள கணவாயை நோக்கிச் செல்லும் செங்குத்தான கணவாய் மூலம் மலையுச்சியை அடைந்தார். அவர் இப்போது கோடைக்கானல் அமைந்துள்ள தாழ்நிலத்திற்குச் செல்லவில்லை. அவர் பழனிமலையில் உள்ள தாவரங்களைப் பற்றி வெளியிட்டுள்ள குறிப்புக்கள் குறிப்பிடத் தக்கவை.

கோடைக்கானலில் முதன் முதலாகத் தங்குவதற்கு மாளிகையைக் கட்டியவர்கள், மதுரையில் வாழ்ந்த அமெரிக்கப் பாதிரிமார்களே (American missionaries).