பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233

நம் நாட்டின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவராமையால் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஆகையினால் அவர்களுடைய கேந்திரமான 'ஜஃப்னா'விற்கு நோயுற்றவர்களைக் கொண்டு செல்லவும், நோயிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களை அழைத்துவரவும் கி. பி. 1838ஆம் ஆண்டு ஒரு சிறு கப்பலே விலைக்கு வாங்க முடிவு செய்தனர். மதுரைக்கு அண்மையிலுள்ள சிறு மலையின் மீது ஒரு மாளிகையை அமைத்து நோயுற்றவர்களை அங்குக் கொண்டு செல்ல முடிவு செய்ததால், அத் திட்டம் கைவிடப்பட்டது. சிறு மலையின்மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அங்குச் சென்றவர்கள் மலைக் காய்ச்சலினால் அடிக்கடி அவதிப்பட்டனர். ஆகையினால் அவ்விடத்தைக் கைவிட்டு விட்டுப் பழனி மலையின் மீது கி. பி. 1845-ஆம் ஆண்டு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தனர். கோடைக்கானல் என்னும் இள மரக்காடு - அமைந்திருந்த சரிவின் அடிவாரத்தில் இரண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கட்டிட வேலை ஜூன் திங்களில் தொடங்கப் பெற்று அக்டோபரில் முடிவுற்றது.

கி. பி. 1834 முதல் 1847 வரை மதுரை மாவட்டத் தண்டலராகப் பணியாற்றிய திருவாளர் ஜான் பிளேக்பர்ன் என்பவர் பழனி மலையின் மீது நிலவரித் திட்டத்தை அமுலாக்கப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். அடுக்கம் கணவாயின் உச்சியிலிருந்து 5 கல் தொலைவில், தாம் தங்குவதற்கென்று ஒரு மாளிகையை அமைத்தார். ஆனால், முதன் முதலாக அம் மாளிகையில் நெருப்பு மூட்டியபோது, அது பற்றி எரிந்து பாழாகியது. அதனுடைய அடிப்படைச் (அஸ்தி வாரம்) சுவரை இன்றும் காணலாம். கி.பி. 1848-49-இல் மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த திருவாளர் தாமஸ் கிளார் (இவர் 1853-ஆம் ஆண்டு மேத் திங்களில், பழனி மலையைப் பற்றி வெளியிட்ட நூல் குறிப்பிடத் தக்கது) என்பாரும், மாவட்ட நடுவ