பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

இக் குற்றத்திற்காகச் சாதியை விட்டுக்கூட விலக்கி விடுவதுண்டு.

மலையாளிகள் இம் மேனரீக முறையை மிகவும் தீவிரமாகக் கடைப் பிடிக்கின்றனர். சில சமயங்களில் இம் முறை விபரீதமாகக்கூடத் தோன்றும். உரிமைப் பெண்ணானவள் குல வழக்கப்படி அவளுக்கென்று குறிப்பிடப்பட்ட மணமகனைவிட மிகவும் வயதில் முதிர்ந்தவளாக இருப்பதும் உண்டு. நான்கைந்து வயதுடைய இளைஞர்களுக்குப் பருவ மெய்திய மங்கையரைத் திருமணம் செய்து வைப்பார்கள். அப்போது மணமகனுடைய தந்தை, தானே பொறுப்பேற்றுக் கொண்டு வம்சவிருத்தி செய்வதுண்டு. தன் மகன் வயதுக்கு வந்ததும் அப் பொறுப்பை அவனிடம் விட்டு விடுவது தந்தையின் கடமை. பொறுப்பேற்றுக் கொண்ட மகன், தன் தந்தையின் வழியைத் தானும் கடைப் பிடிப்பான். ஓர் இளம் மணமகனுக்குத் தந்தை இல்லை என்றாலோ, அல்லது தந்தை இருந்தும் அவன் மருமகளின்பால் அக்கறை கொள்ளாதவனாக இருந்தாலோ, தந்தையின் உடன்பிறந்தவனோ அல்லது நெருங்கிய உறவினன் ஒருவனோ இப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுவது வழக்கம். இவ் வழக்கத்தைப்பற்றி மலையாளிகள் இப்பொழுது குறைவு பட எண்ணுகின்றனர். இதை ஓரளவு எதிர்த்தும் வருகின்றனர். முன் நாட்களில் இது பெரு வழக்காக இவர்களிடம் பரவியிருந்தது.

திருமணம் :

மலையாளிகளின் திருமணம் சமவெளியிலுள்ளோரின் திருமணத்தினின்றும் சிறிதே மாறுபடுகிறது. திருமணத்திற்குமுன் 'வெற்றிலை பாக்குப் பிடித்தல்' என்ற ஒரு பழக்கமுண்டு. இதை வடமொழியில் 'நிச்சயதார்த்தம்' என்பர். திருமண ஒப்பந்தமே இச் சடங்கு.