உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 131

66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்

இராமநாதபுரம் சேதுபதிகளின் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் இல்லாமல் அரண்மனையில் ஏராளமான ஓலை ஆவணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கோயில்கட்குக் கொடுத்த கொடைகளைக் குறிக்கின்றன. சிறுபான்மை தனிப்பட்டவர்கட்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கின்றன.

அவற்றில் பல்வேறு ஆவணங்கள் இசுலாம் தொடர்பானவை. பூலாங்கால் பள்ளிவாசலுக்கு முத்து விசைய ரகுநாத சேதுபதியும் முத்துவிசைய ரகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் நிலக் கொடை வழங்கியுள்ளனர்.

அபிராமம் பள்ளிவாசலுக்குத் திருவிளக்குக்காக முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை என்பவர் நிலம் வாங்கிக் கொடையாக அளித்தார்.

நாரணமங்கலம் சுல்தானுக்கு குமார முத்துவிசைய ரகுநாத சேதுபதி நிலக் கொடையளித்தார். இதுபற்றிய செப்பேடு உள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது.

தேரூர் தாலுக்கா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் பற்றிய கொடைச் செய்தி நவாபு ஆணையில் உள்ளது என்று பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா கூறிய செய்தி ஓலையில் எழுதப்பட்டுள்ளது.

மற்றும் பூலாங்கால், போந்தப்புளி, தொண்டி, காட்டுபாவா சத்திரம், புல்லுக்குடி, திருச்சுழியல், காரேந்தல், சொக்கிகுளம், கொக்காடி, நாடாகுளம், குச்சனேரி, லட்சுமிபுரம் போன்ற பல ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் நிலம், பொன், பொருள் கொடையாகச் சேதுபதி மன்னர்களால் கொடுக்கப்பட்டுள்ளன.

திருவிளக்குகள் ஏற்றவும், கந்தூரி நடத்தவும் அன்னதானம் ஆடை அளிக்கவும் இக்கொடைகள் பயன்படுத்தப்பட்டன.

இராமநாதபுரம் அரண்மனை அலுவலகம்